தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மல்டி மீடியா பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கை,கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி மற்றும் மிதமான மனவளர்ச்சி குன்றியோருக்கு ஒரு மாத கால பயிற்சியாக தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் மூலம் 6 வகையான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
எப்சிவி- டிஜிட்டல் நான் (லீனியர்) எடிட்டிங், ஏவிஐடி- டிஜிட்டல் நான் (லீனியர்) எடிட்டிங், மல்டி மீடியா பயிற்சி, போட்டோஷாப் பயிற்சி, ஆடியோ இன்ஜினியரிங், அனிமேஷன் ஆகிய பயற்சியில் சேர மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
18 வயது முதல் 40 வயது வரையுள்ள 8 ஆம் வகுப்புக்கு மேல் தேர்ச்சி பெற்ற கை, கால் பாதிக்கப்பட்ட (40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை) செவித்திறன் பாதிக்கப்பட்டவர் (ம) மிதமான மனவளர்ச்சி குன்றியோர் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி கட்டணம் மற்றும் விடுதி வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு உதவித்தொகையாக நபர் ஒருவருக்கு ரூ.1000 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் தங்கள் விண்ணப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்விச்சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் “மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரிக்கு பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340626 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.