நவத்திருப்பதிகளில் 9வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் சித்திரைத்தேர் வெள்ளோட்டம் இன்று நடந்தது. தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் நவத்திருப்பதிகளில் 9வது திருப்பதியாகவும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திருத்தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், ராமானுஜர் ஆகியோரது அவதார தலமாக விளங்கும் ஆழ்வார்திருநகரியில் 107 வைணவ தலங்களில் இல்லாத வகையில் நான்கு தேர்களை அரசர்கள் மற்றும் முன்னோர்கள் ஏற்படுத்தி பாதுகாத்து வந்துள்ளனர்.
இந்தக் கோவிலில் மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி என நான்கு மாதங்களும் நடைபெறும் திருவிழாக்களின் போது 9ம் நாள் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
கோவிலின் சித்திரை திருத்தேர் பழுந்தடைந்து சில ஆண்டுகள் தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை ஸ்ரீஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா மற்றும் காரிமாறன் கலைக்காப்பக நிர்வாகிகள் ரூ.1 கோடி மதிப்பில் புதிய தேரை தயார் செய்தனர். இந்த புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று நடந்தது. திருத்தேரில் தீர்த்தவாரி குடங்கள் வைக்கப்பட்டன.
முன்னதாக தேரடி மாடனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தேர் புறப்படுவதற்கு முன்பு பூசணிக்காய் உடைக்கப்பட்டு, பெண்கள் ஆரத்தி எடுத்தனர். முன்னதாக காலை 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணி முதல் 6 மணி வரை தத்து ஹோமம், 7 மணிக்கு ஆவாஹனம், திருவாராதனம், கற்பூர ஆரத்தி நடந்தது.
வருகிற 26ம் தேதி காலை 6 மணியிலிருந்து 6.40க்குள் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தக்காரும், செயல் அலுவலருமான விஸ்வநாத் தெரிவித்தார்.