 
                
குற்றம் செய்தவர்களைப் பார்த்து, “படித்தவன் நீ எப்படி இதைச் செய்தாய்?!, படித்தும் முட்டாள்தனமான இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறாயே!? என்று சமூகம் அங்கலாய்ப்பதைப் பார்க்கிறோம். கல்வி கற்றவர்கள் குற்றங்கள் செய்ய மாட்டார்கள் என்ற எண்ணமும், செய்யக் கூடாதென்ற எதிர்பார்ப்பும்தான் இந்தக் கேள்விகளில் நிறைந்திருக்கின்றன.
ஆம்…கல்வி என்பது எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பதும் கற்றுக்கொள்வதுமான செயல்.
உணர்ச்சிகளால் நிரம்பியவை உயிரினங்கள்.மனிதனும் அதற்கு விதிவிலக்கானவன் அல்ல.மனிதன் மற்ற விலங்குகளைபோலின்றி தனது உணர்ச்சிகளை நெறிபடுத்தி வாழ முயல்பவன். எனவே தான் பிற விலங்குகளிலிருந்து மேம்பட்டவனாகவும் வாழ்கிறான்.
தனது உணர்ச்சிகளை முறையற்று வெளிப்படுத்துபவனை, நீ என்ன மிருகமா,என்கிறோம் தானே?நெறிப்படுத்தி வாழ்தல் என்பது தனது மனப்போக்கைச் சீரமைத்து வாழப்பழக்குவித்தல் எனலாம்.
இதற்கென்று வாழ்நாளெல்லாம் நாம் மெனக்கட வேண்டியதில்லை. வாழ்க்கைக்கான இலட்சியப் பாதை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் பாதையில் செல்ல பழக்கப்படுத்தி விட்டால் போதும்…அதன்பிறகு இலட்சிய நோக்குடையவர்களின்
உணர்ச்சிகளை இலட்சிய உணர்வே கட்டுப்படுத்தி விடுகிறது. கூர்மையானதொரு இலட்சியம் ஆற்றல்மிக்கது என்பதை அதன் பாதையில் செல்வோரால் எளிதில் உணர முடியும்.
அதற்குத் தடையாக இருப்பதில் பெரும் பங்கு வகிப்பது இலட்சியவாதிக்குள் அடைபட்டுக் கிடக்கும் அதீத உணர்ச்சிகள் தான் .
பேராற்றல் மிக்க இலட்சியத்தை அடைய முயலும் போது ஏற்படும் தடைகளுள் உணர்ச்சிப் பெருக்கும், அதன் விளைவுகளும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உணர்ச்சிகள் என்பது , கவலை , கோபம் , மகிழ்ச்சி,பயம், பாலியல் உணர்வு , …
போன்றனவற்றைக் குறிப்பதென்பது அறிந்ததுதான். இவ்வுணர்ச்சிகளின் அளவும், இவற்றைக் கையாளும் விதமும் ஆளாளுக்கு அவர்களது மரபணுக்கள், வாழும் சூழல், வளர்ப்பு முறை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடத்தான் செய்கின்றது.ஆனால் இவற்றை நெறிபடுத்த மனத்தைப் பழக்கிக் கொள்வது மிகவும் அவசியம். “மனக்கட்டுப்பாடு” என்பார்களே அது தான் இது.
“உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த அறிந்தவர்களே தன்னை அடக்கி ஆள்பவர்கள் . அவர்களால் தான் உலகையே ஆள முடியும்.தன்னை அடக்க முடியாதவன் மற்றவர்களை எப்படி ஆளுகை செய்வான்?” என்கின்றார்கள் ஞானிகள்.
நாம் அனுமதிக்காமல் ஒருபோதும் வெளி உலகம் நம்மைக் கட்டுப்படுத்தவே முடியாது.
இலட்சியத்தை அடைய, தனது உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் திறனையும் கற்றுக் கொண்டு வாழ்வின் பழக்கமாக்கிக் கொண்டால் வாழக்கற்றுக் கொண்டோம் என்று கொள்ளலாம்.
அளவுக்கு மீறிய கோபம், பாலியல்உணர்ச்சிகள்… இதெல்லாம் தான் தனிமனிதனின் நற்பெயரைக் கெடுப்பதோடு இலட்சிய நோக்கையே மறக்கடித்தும் விடுகிறது. அதிகப்படியான கவலைகளும் அப்படித் தான். வருவது வரட்டும் என்று எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மையை ஒரு சாதனையாளன் தனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த உணர்ச்சிகளுக்கும் அடிமைப்பட்டு விடாமல் வாழும் விழிப்பு நிலையே இங்கு அவசியமானது.இலட்சியத்தில் வென்றவர்களின் வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால் அவர்கள் அனைவருமே தங்களது உணர்ச்சிகளைப் பின்னுக்குத் தள்ளி, கடமைகளையும், உழைப்பையும் தங்களுக்கு முன்னால் வைத்து செயல்பட்டிருப்பதைக் காணலாம்
ஆனால் எல்லா உணர்வுகளும் உயிருள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்தே தீரும். அவை இல்லாவிட்டால் தான் எங்கோ நம்மில் பிரச்சனை உள்ளது என்று பொருள்.
உணர்ச்சிகளின் கட்டுப்பாடற்ற தன்மை நமது இலட்சியத்தை அடையவிடாமல் தடுக்கும் ஆற்றலுடையவை. தியானம் ,தனிமனித ஒழுக்கம் , இறை நம்பிக்கை,
உடற்பயிற்சி போன்றவை நமது அதிக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் எளிய கருவிகள்.

 
                     
                     
                     
                    

