பெண்களுக்கு கறவை மாடுகள் 100% மானியத்தில் வழங்கப்படும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதி செய்யவும், பால் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் நடப்பாண்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் 100% மானியத்தில் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ரூ.50,000/- மதிப்புள்ள கறவை மாடும், அதற்குரிய காப்பீடும் (2 வருடங்களுக்கான), வழங்கப்பட்ட கறவை பசுவை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, உடனடி தீவன செலவினத்திற்காக ரூ.3,000/- வழங்கப்படும்.
இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட மகளிர் மற்றும் திருநர்கள், கறவை பசு வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள், கறவை பசு வளர்ப்பதற்கு போதுமான அளவு இடவசதி, தீவன வசதி உள்ளோர் பயன்பெறலாம். 2.5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், குடும்ப ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், ஏற்கனவே கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக கால்நடைகள் வழங்கிய திட்டத்தில் பயன் பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே கறவை மாடு வைத்துள்ளோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
இத்திட்டத்தில் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநர்கள், மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களை கொண்ட மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் (Focus Block Development programme) செயல்படும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியங்களில் நடப்பாண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த தகவல்களை மாவட்ட இணையதளம் https:/thoothukudi.nic.in மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்தில் (www.ahd.tn.gov.in) அறிந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் கீழ்கண்ட நிலையங்களில் உள்ள விண்ணப்ப உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
1. துணை இயக்குநர் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி அலுவலகம், கால்நடை பன்முக மருத்துவமனை, தூத்துக்குடி
2. – கால்நடை மருந்தகம், ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர்,
இது குறித்து மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Domain name: tnahschemes.tn.gov.in இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் 27.11.2026 முதல் 17.12.2026 முடிய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


