தூத்துக்குடி தாமோதரன் நகர் மெயின்ரோட்டை சீரமைத்து, குழிகளை நிரப்பி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தாமோதரன் நகர் மெயின்ரோடு நீண்ட நாட்களாகவே மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. சாலையின் இருபுறமும் ஆங்காங்கே பெரிய பெரிய குழிகள் உருவாகி, தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.
இதனால் அவ்வழியே தினமும் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குழிகளைத் தவிர்த்து செல்ல முயலும் போது எதிர்புறம் வரும் வாகனங்களுடன் மோதும் அபாயம் ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் விபத்து நேரிடும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மழைக்காலங்களில் குழிகளில் தண்ணீர் நிரம்பி விடுவதால், குழியின் ஆழம் தெரியாமல் வாகனங்கள் சிக்கிக்கொள்வதும், வாகனங்கள் பழுதடைவதும் தொடர்கதையாக உள்ளது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் பொதுமக்களும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, உடனடியாக தாமோதரன் நகர் மெயின்ரோட்டை சீரமைத்து, குழிகளை நிரப்பி, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


