பழமை மாறாமல் புராதன முறையில் சீரமைக்கப்பட்ட எட்டயபுரம் மகாகவி பாரதியார் இல்லத்தின் திறப்பு விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சி 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லம் அமைந்துள்ளது. பழமையான இந்த இல்லம் அரசால் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் தினமும் இதனைப் பார்வையிட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி மாலை 6 மணியளவில் பார்வையாளர் நேரம் முடிவடைந்து உட்பகுதிக் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தபோது, திடீரென வரவேற்பாளர் பகுதியின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ்த்தளத்தின் மேற்கூரையும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து விழுந்தன. அச்சமயம் உள்ளே யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புக் கருதிப் பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
அதன்பின், ரூ.1.53 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் புராதன முறையில் பாரதியார் இல்லத்தைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் கடந்த 9 மாதங்களுக்கு முன்பே முழுமையாக நிறைவடைந்து, இல்லம் திறப்பு விழாவுக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ( நவம்பர் 26) காலை 11 மணியளவில் பாரதியார் இல்லத்திற்குத் திறப்பு விழா நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகக் கடந்த 2 நாட்களாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு விழா ஏற்பாடுகளைத் தீவிரமாகச் செய்து வந்தனர். ஆனால், நேற்றிரவு திடீரெனத் திறப்பு விழா ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, கடந்த 16-ஆம் தேதி பாரதியார் இல்லம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது முறையாகவும் விழா ஒத்திவைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பாரதியார் இல்லத்தைக் காண தினமும் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், இல்லம் பூட்டப்பட்டிருப்பதால் பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப் போவது அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதால், பாரதியார் இல்லத்தை விரைவில் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


