ஆதிச்சநல்லூர் மிகவும் பழமையான தொல்லியல் தளமாகும். இவ்விடத்தில் 125 ஏக்கர் நிலப்பரப்பு மத்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பிப்ரவரி 2020 அன்று மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும், 2026 மத்திய பட்ஜெட்டிலும் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் தளங்களைக் கலாச்சார மையங்களாக மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
தற்காலிக ஆன்-சைட் அருங்காட்சியகப் பகுதி மற்றும் புதிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 5, 2023 அன்று நடைபெற்றது. இருப்பினும், டிசம்பர் 2023 வெள்ளத்திற்குப் பிறகு பணிகள் மெதுவாகவும் சில காலத்திற்குத் தாமதமாகவும் இருந்ததாகச் செய்திகள் வெளியாகின. இதற்கிடையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தொடர்ந்த வழக்கில் மத்திய தொல்லியல் துறையினர் பதில் கூறினர். அதில், டிசம்பர் 2023 வெள்ளத்தில் சேதமடைந்த ஆதிச்சநல்லூர் தளப் பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், திறந்தவெளி அகழாய்வுப் பகுதிகளின் மீது மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இந்தியத் தொல்லியல் துறை நவம்பர் 2026-இல் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் நீதியரசர்கள் வழக்கை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில் தற்போது ஆதிச்சநல்லூரில் மழையினால் பாதிக்கப்பட்ட திறந்தவெளி அகழாய்வுப் பகுதிகளில் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை மாணவர்கள் துறைத்தலைவர் முனைவர் சுதாகர் தலைமையில் பாரம்பரிய தின விழாவை முன்னிட்டு இங்கு பயணித்தனர். இந்த இடத்தினை தூத்துக்குடி சப்-கலெக்டர் விவேக் யாதவ் பார்வையிட்டார். அவருக்குத் திருச்சி தொல்லியல் இயக்குநர் அறவாழி, தொல்லியல் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் விவரம் கூறினர். அவருடன் முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் முனைவர் கந்தசுப்பு உடன் வந்தார்.
தொடர்ந்து வேகமாக நடைபெறும் பணிகளுக்காக இந்தியத் தொல்லியல் துறையினரைத் தொல்லியல் ஆர்வலர்கள் பாராட்டினர். அதேவேளையில், விரைவில் அருங்காட்சியகம் அமைத்துத் திருச்சிக்குக் கொண்டு சென்ற ஆதிச்சநல்லூர் பொருள்களைத் திரும்பக் கொண்டு வந்து, ஆதிச்சநல்லூரில் நிரந்தர அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


