தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் நகைக்கடன் வைத்துள்ள வாடிக்கையாளர்களை வங்கி அதிகாரிகள் தொடர்பு கொண்டு, நகைக் கடனுக்கான ஓர வைப்புத் தொகையைச் செலுத்துமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளின் மதிப்பும் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன் தொகைக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுவதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்து, வாடிக்கையாளர்களை ஓர வைப்புத் தொகை (Margin Money) செலுத்துமாறு கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
மேலும், முன்னதாக 1 கிராம் தங்கத்திற்கு ரூ.12,000 வரை நகைக்கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய விலைச் சரிவைத் தொடர்ந்து 1 கிராமுக்கு ரூ.8,000-க்கும் குறைவாகவே கடன் தொகை வழங்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் புதிதாக நகைக்கடன் பெற வங்கிகளுக்கு வருவோர் குறைந்த தொகையே கிடைப்பதால் ஏமாற்றமடைந்து வருகின்றனர். சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரும் வரை இந்நிலையே தொடரும் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


