தங்கள் சிந்தனையில் கருவாகி, உங்கள் எழுதுகோல் பிரசவித்து, ‘ராணிமுத்து’ எனும் தொட்டிலில் தவழ்ந்து இன்று வாசகர்கள் பலரால் சீராட்டப்படும் ‘பெண்ணே பொன்னோடு வா’ எனும் நாவல், மழலைக் கல்வியின் மகத்துவம் உணராதவர்களுக்கும் எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் உன்னதமான நாவல். 12-ஆம் அத்தியாயத்தில் தலைமை ஆசிரியர் பெண்களுக்குக் கல்வியின் அவசியம் குறித்துக் கூறும் கருத்துகள், நாம் அனைவரும் நம் மனக்கல்வெட்டில் பொன்னெழுத்துகளால் பொறித்துக்கொள்ள வேண்டிய சிறப்பும் மதிப்பும் மிக்க கருத்துகள். கீழே வருவது மிகவும் உண்மை; 12-ஆம் அத்தியாயத்தை வாசித்து முடித்தபோது என் மெய் சிலிர்த்தது. தினமலர் ‘வாரமலர்’ இதழில் பெண்களுக்குக் கல்வியின் தேவை குறித்துச் சில சிறுகதைகள் வாசித்துள்ளேன். இப்போதுதான் ஒரு நாவல் படித்துள்ளேன். நிறைவாகச் சுருக்கமாகக் கூற வேண்டுமானால், மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடநூல்களில் இணைக்கும் தகுதியும் தரமும் மிக்க உன்னதமான நாவல். இன்றைய சமுதாயத்திற்கு இன்றியமையாத் தேவை இது போன்ற நாவல்கள். இத்தகைய சிறந்த நாவலைத் தந்த தங்களுக்கு மிக்க நன்றி. இதுபோல் இன்னும் பல நாவல்களைத் தந்திட இதயம் கனிந்த இனிய வாழ்த்துகள்.
பெண்ணே பொன்னோடு வா | முத்தாலங்குறிச்சி காமராசு | ராணிமுத்து | விமர்சனம்
— மு. அய்யப்பன், செங்கோட்டை


