திருநெல்வேலி சரக காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், டி.ஐ.ஜி இரா. திருநாவுக்கரசு பொதுமக்களிடமிருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் பொதுமக்களின் புகார்கள் மற்றும் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி சரக காவல்துறை அலுவலகத்தில் நேற்று (18.11.2026) பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேரில் கலந்து கொண்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இதேபோன்று, திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்றன. இம்முகாம்களில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 322 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


