முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி குமரவிடங்க பெருமான் – தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

தபசுக் காட்சி & மாலை மாற்றும் வைபவம்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ஆம் திருநாளான நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, 7-ஆம் திருநாளான நேற்று (நவ. 16) அதிகாலை 3 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்குத் தெய்வானை அம்பாள் தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசுக் காட்சி மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோயிலில் இருந்து எழுந்தருளி, சன்னதி தெரு, புளியடி சந்தனமாரியம்மன் கோவில் தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசுக் காட்சி மண்டபத்திற்குச் சென்றார். அங்குத் தெய்வானை அம்பாளுக்குக் காட்சி கொடுத்த பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, தெற்கு ரத வீதி மற்றும் மேல ரத வீதி சந்திப்பிற்குச் சுவாமி குமரவிடங்க பெருமானும், தெய்வானை அம்பாளும் எழுந்தருளினர். அங்குத் தெற்கு ரத வீதியில் நின்ற சுவாமி குமரவிடங்க பெருமானை, தெய்வானை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்குப் பட்டாடைகள், மாலைகள் மாற்றப்படும் மாலை மாற்றும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

மாலை மாற்றும் நிகழ்ச்சி நிறைவடைந்ததும், சுவாமியும் அம்பாளும் மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி மற்றும் 4 உள்மாட வீதிகளில் வீதி உலா வந்து சன்னதி தெரு வழியாகக் கோயிலை வந்தடைந்தனர்.

பின்னர் இரவு ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி வெகு விமரிசையாகத் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு மற்றும் சுவாமி படம் அடங்கிய பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவின் தொடர்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் அருணாசலம் மற்றும் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.