எப்போதும்வென்றான் அணைக்கட்டுப் பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, இன்று (நவம்பர் 12) மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், எப்போதும்வென்றான் அணைக்கட்டுப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அணைக்கட்டின் நீர்மட்டம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உபரிநீர் செல்லும் கால்வாய்களில் தடையின்றி நீர் செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து எட்டயபுரம் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் இயக்க மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.92 இலட்சம் மதிப்பீட்டில் வணிக வளாக கட்டடத்திற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கேக் வழங்குவது குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.வி. முரளிதரன் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உடன் இருந்தார்.


