நெல்லை – திருச்செந்தூர் இடையே 4 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலிருந்து நேரடியாகச் சிறப்பு ரயில்கள் இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சென்னை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்க ரயில்வே வளர்ச்சிக்குழு வலியுறுத்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பக்தர்களின் வசதிக்காகச் சென்னை மற்றும் திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளர்ச்சிக் குழுவினர் தென்னக ரயில்வேக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நாளன்று பக்தர்களின் வசதிக்காகத் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் பயனடைவர்.
இருப்பினும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடியாகச் சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்துத் தென்னக ரயில்வே இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
கந்த சஷ்டி விழாவின் போது சென்னையில் வசிக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் மற்றும் முருக பக்தர்கள் லட்சக்கணக்கில் திருச்செந்தூருக்கு வருகை தருவது வழக்கம். கடந்த ஆண்டும் இந்த விழாவிற்காகச் சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
எனவே, இந்த ஆண்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் பாதுகாப்பாகவும் எளிதாகவும் வந்து செல்லும் வகையில், சென்னை – திருச்செந்தூர் இடையே உடனடியாகச் சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளர்ச்சிக் குழுவினர் தென்னக ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.


