தூத்துக்குடி பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், “ரோசாட்டம் ஸ்டேட் அட்டாமிக் எனர்ஜி கார்ப்பரேஷன்” (Rosatom State Atomic Energy Corporation) அமைப்பின் அறிவியல் விழிப்புணர்வு முயற்சியின் மூலம், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காகச் சர்வதேச அறிவியல் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இத்திருவிழாவில் ரஷ்யாவின் ‘ANO எனர்ஜி ஆஃப் தி பியூச்சர்’ திட்ட மேலாளர்களான டேரியா கோர்சிவா மற்றும் கரீனா கார்துசினா உள்ளிட்ட ரஷ்ய அறிவியல் பிரதிநிதிகளும், உத்தரகண்ட்டைச் சேர்ந்த லக்கி ராவத் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

‘ஐஸ்பிரேக்கர் ஆஃப் நாலேட்ஜ்’ போட்டியின் வெற்றியாளரும், வடதுருவப் பயணத்தில் பங்கேற்றவருமான லக்கி ராவத் தலைமையில் நடைபெற்ற “ஐஸ்பிரேக்கர் வாய்ஸஸ்” என்ற ஊடாடும் அமர்வு நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.

அமர்வில் அவர் தனது வடதுருவப் பயண அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், ஆர்க்டிக் காலநிலை, துருவப் பகுதியில் ஏற்படும் பகல் மற்றும் இரவு மாற்றங்கள், அணுசக்தி மூலம் இயங்கும் பனிமுறிப்பான்களின் (Nuclear Icebreakers) பங்கு குறித்தும் விரிவாக விளக்கினார்.

தொடர்ந்து, மாணவர்கள் “பில்ட் தி பிரிட்ஜ்” மற்றும் “நியூக்ளியர் குவெஸ்ட்” போன்ற செய்முறை அறிவியல் செயல்பாடுகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இது மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல், குழுப்பணி மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது.

ஊடாடும் கற்றல் மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள் மூலம் அறிவியல் கருத்துகளை மாணவர்கள் எளிதில் ஆராய்வதற்கும், இளம் கற்பவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆர்வத்தை வளர்ப்பதற்கும் இத்திருவிழா பெரும் வாய்ப்பாக அமைந்தது.