தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தமிழ் சாலையில் இருந்து டூவிபுரம் பிரதான சாலைக்கு செல்லும் சின்னத்துரை ஜவுளிக்கடை அருகே உள்ள சாலையில், குடிநீர் குழாய் பழுது பார்ப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளை மாநகராட்சி நிர்வாகம் இதுவரை சீர் செய்யாததால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகரில் முக்கிய போக்குவரத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாக தமிழ் சாலை – டூவிபுரம் இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் பிரதான குழாயில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்காக மாநகராட்சி பணியாளர்கள் சாலையின் நடுவே பெரிய குழிகளை தோண்டினர்.

பழுது நீக்கும் பணி முடிந்து பல நாட்கள் ஆகியும், தோண்டப்பட்ட குழிகளை மூடி சாலையை மீண்டும் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த வழியாக தினமும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பள்ளி குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் இதில் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தோண்டப்பட்ட குழிகளை மூடி, சாலையை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.