விவசாயக் கடன்களை நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தேர்தல் வாக்குறுதிப்படி விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது சாகுபடிப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளுக்குத் தடையின்றி உடனுக்குடன் கடன் வழங்க வேண்டும்.
2025-2026-ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து விவசாயப் பயிர்களைப் பாதுகாக்க உரிய வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, நீர்ப்பாசனக் கால்வாய்களைத் தூர்வார வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வேண்டும். இத்தகைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவத்தால் விளாத்திகுளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


