தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. இந்நிலையில், வாகைகுளம் சுங்கச்சாவடி வழியாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், குறிப்பாகப் பெண்கள், சிறுமிகள் மற்றும் முதியவர்கள் அவசரத்திற்குச் சிறுநீர் கழிப்பதற்குக் கூட கழிப்பிட வசதி இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய விதிகளின்படி, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகச் சுத்தமான கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது கட்டாயமாகும்.

ஆனால், வாகைகுளம் சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிட வசதிகள் முறையான பராமரிப்பின்றிப் பூட்டி வைக்கப்பட்டோ அல்லது பயன்படுத்த முடியாத நிலையிலோ காணப்படுவதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். கட்டணம் மட்டும் வசூலிக்கும் சுங்கச்சாவடி நிர்வாகம், அடிப்படை வசதிகளை வழங்குவதில் அலட்சியம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, வாகைகுளம் சுங்கச்சாவடியில் பெண்களுக்குத் தனி கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.