திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் வழக்கத்தை விடக் கடலின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கடலில் புனித நீராடச் சென்ற பக்தர்கள் அலையில் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக எழும்பிய ராட்சத அலையில் சிக்கி பெண்கள் உள்பட 5 பக்தர்கள் அலையால் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் 5 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கடற்கரையில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகமாகக் காணப்படுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்குமாறு காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.