தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள், கழிவு நீர் அகற்றும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, முன்னிலையில் டெங்கு தடுப்பு பணிகள், கழிவு நீர் அகற்றும் பணி, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் போன்ற திட்ட பணிகள், தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 39 ஆவது வார்டு பத்ரகாளியம்மன் கோவில் தெரு 31 ஆவது வார்டு, அண்ணா நகர் 6 ஆவது தெரு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுத்து பெறும் பணிகளையும், மாநகராட்சி பணியாளர்கள் கழிவு நீர் கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்றும் பணிகளையும், சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, பொதுமக்களிடம் நீங்கள் கழிவு செய்யப்படும் தேங்காய் சிரட்டை, டயர் ஆட்டுக்கல் உரல், பாட்டில்கள் போன்றவற்றை அகற்றிட வேண்டும்.

மேலும், பாத்திரங்களை சேமித்து வைக்கின்ற குடிநீர் மூடி வைக்க வேண்டும். குடிநீரை கொதிக்க வைத்து பாதுகாப்பான முறையில் குடிக்க வேண்டும். தொடர்ந்து குப்பைகளை பிரித்து கொடுக்கும் பொழுது பொது மக்களாகிய நீங்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தார்.
இந்தஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா ப்புருவான், மாவட்ட சுகாதார அலுவலர் யாழினி, வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர்.


