தூத்துக்குடி எம்.ஜி.ஆர். பூங்காவில் சிறிய ராட்டினக் கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த இளைஞரைத் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுயம்புலிங்கம் என்பவர், நேற்று வெள்ளிக்கிழமை மாலையில் தனது குடும்பத்தினருடன் பூங்காவிற்கு வந்துள்ளார். அப்போது, அங்கிருந்த சிறுவர்கள் விளையாடும் சிறிய ராட்டினத்தில் அவர் அமர்ந்து சுற்றியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக, அவரது இடுப்புப் பகுதி ராட்டினத்தின் இரும்புக்கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது. சுயம்புலிங்கத்தால் எவ்வளவு முயன்றும் கம்பிகளுக்கு இடையில் இருந்து வெளியே வர முடியவில்லை. இதைப் பார்த்த பூங்கா காவலாளி உடனடியாகத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்குத் தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் அரை மணி நேரம் தீவிரமாகப் போராடி ராட்டினக் கம்பிகளுக்கு இடையே சிக்கியிருந்த அவரை காயங்களின்றிப் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தால் பூங்கா வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


