திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவின் 8-ஆம் நாளான நேற்று, சுவாமி சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
இத்திருக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி மற்றும் அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ஆம் திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 6 மணிக்கு பந்தல் மண்டபம் தையல்நாயகி வகையறா மண்டகப்படி மண்டபத்திலிருந்து பிரம்மா அம்சத்தில் வெள்ளை சாத்தி பெரிய வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி காலை 7.30 மணிக்கு மேலக்கோவில் சென்றடைந்தார்.
தொடர்ந்து, பந்தல் மண்டபம் ஸ்ரீவைகுண்டம் சுந்தர ராமசுப்பிரமணிய பிள்ளை வகையறா மண்டபத்தில் சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பகல் 12 மணிக்குக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோவிலைச் சேர்ந்தார்.
செவ்வாய்க்கிழமை (செப். 8): காலை சுவாமி குமரவிடங்கப்பெருமானும், சுவாமி அலைவாயுகந்தப்பெருமானும் தனித்தனி வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி, வீதி உலா வந்து மேலக்கோவில் சேர்கின்றனர்.
9-ஆம் திருவிழா (செப். 8): பகலில் சுவாமி குமரவிடங்கப்பெருமான், வள்ளியம்மன் தனித்தனிப் பல்லக்கிலும்; இரவில் சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.
தேரோட்டம் (செப். 9): சிகர நிகழ்ச்சியான பத்தாம் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 9) காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இத்திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


