தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தபால் தந்தி காலனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய மேயர், “பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன” என்று கூறினார்.
இந்த ஆய்வின் போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


