தாமிரபரணி என்பது வெறும் நதியல்ல; அது நம் உயிர்நாடி. மாவட்ட நிர்வாகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்தால் எந்தவொரு நதியையும் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்கிறார் இதன் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் முத்தாலங்குறிச்சி காமராசு.
2023-ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாரங்களைக் கடும் பாதிப்பிற்கு உள்ளாக்கியது. பஜார்கள் அழிந்தன; பொருள்கள் எல்லாம் வீணாயின. இதற்கு முதன்மைக் காரணம் தாமிரபரணி ஆற்றில் அடர்ந்து கிடந்த முள்செடிகளே ஆகும். இந்த முள்செடிகளை அகற்றினால் மட்டுமே வருங்காலத்தில் வெள்ளத்திலிருந்து இந்த இரு தாலுகாக்களும் தப்பிக்க இயலும் என்ற நிலை ஏற்பட்டது.
முத்தாலங்குறிச்சி காமராசுவின் ஒருங்கிணைப்பில் மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள், வியாபாரிகள் சங்கம், உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி மாணவ-மாணவிகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிற்கு ஆற்றின் இருபுறங்களிலும் இருந்த முட்செடிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், சுமார் 2.50 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் விதைப்பந்துகளும் தூவப்பட்டுள்ளன. இதன் பிறகு 2025-இல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மக்கள் பெருமளவில் பாதிப்படையாமல் இருந்ததே இப்பணியின் மிகப்பெரிய வெற்றியாகும். இந்தப் பணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஆரம்பக் காலத்தில் முத்தாலங்குறிச்சி காமராசுவின் தாமிரபரணி பணி
முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 35 வருடங்களாகத் தாமிரபரணிக்காகப் பணியாற்றி வருகிறார். ஆரம்பக் காலத்தில் பொதிகை மலையிலிருந்து புன்னகாயல் வரை நடந்தே சென்று கள ஆய்வு செய்துள்ளார். இந்த அனுபவங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ‘தலைத்தாமிரபரணி’, ‘இடைத்தாமிரபரணி’ என தலா ஆயிரம் பக்கங்கள் கொண்ட நூல்களை எழுதி வருகிறார். இதற்கிடையில் ‘கடைத்தாமிரபரணி’ நூலையும் எழுதி வருகிறார்.
முதன்முதலில் வடமொழி நூலான ‘தாமிரபரணி மகாத்மியம்’ குறிப்பிடுவது போல, தாமிரபரணி பிறந்த நாளான வைகாசி விசாகத்தன்று, நதியைக் காக்கத் தனது நண்பர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். கிட்டத்தட்ட 27 வருடங்களாக இந்த விழிப்புணர்வுப் பணி தொடர்ந்தது. நதியைக் காக்கப் பக்தி மிக முக்கியக் காரணம் என்பதை உணர்ந்து, 2018-இல் மகா புஷ்கர விழாவைக் கொண்டாட வேளாக்குறிச்சி ஆதீனம் முயற்சி செய்தபோது, பலர் வழக்குத் தொடர்ந்து அந்தப் பிரம்மாண்டமான விழாவை மதுரை உயர்நீதிமன்றம் மூலம் தடை செய்ய முயன்றனர்.
அப்போது முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நூலில், 12 வருடங்களுக்கு முன்னால் புஷ்கரம் நடந்ததற்கான வரலாற்றுத் தகவல்கள் இருந்ததை மேற்கோள் காட்டி, புஷ்கர விழாவை நடத்த நீதியரசர்கள் அனுமதி அளித்தனர். இதனால் மக்களிடம் பக்தி விழிப்புணர்வோடு, நதி சார்ந்த விழிப்புணர்வும் கிடைத்ததோடு மட்டுமல்லாமல், நதியின் பல படித்துறைகளும் சீரமைக்கப்பட்டன.
தாமிரபரணி நதி வற்றாத ஜீவநதி. இந்த நதி தனது கண் முன்னாலேயே சாக்கடையாக்கப்படுவதைக் கண்டு மனம் வெம்பிய முத்தாலங்குறிச்சி காமராசு, பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தார். 2018-இல் தாமிரபரணி ஆறு குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் டாக்டர் அழகு மணி மூலம் வழக்குத் தொடர்ந்தார்.

இதனால் தாமிரபரணி விவகாரம் அரசிடம் கவனம் பெற்றது. 2024 மார்ச் மாதம் இந்த வழக்கிற்கான தீர்ப்பு வந்தது. “உள்ளாட்சி அமைப்புகள் தாமிரபரணியில் சாக்கடையைக் கலக்கக் கூடாது; இந்து சமய அறநிலையத்துறை நதிக்கரை மண்டபங்களைச் சீரமைக்க வேண்டும்” என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தமிழக அரசு இதனைப் போதிய அளவில் கண்டுகொள்ளவில்லை. இதனால் 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆம் தேதி நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் நேரில் வந்து தாமிரபரணியில் ஆய்வு செய்தனர். அதன் பிறகும் நடவடிக்கைகள் சுணங்கின. இந்த நிலையில், 2026 ஜனவரி 4-ஆம் தேதி இந்தியாவின் நீர் மனிதர் (Waterman of India) ராஜேந்திர சிங் அவர்கள் தாமிரபரணி ஆற்றில் நேரில் வந்து பொதிகை முதல் புன்னகாயல் வரை ஆய்வு செய்தார். அவர் விரைவில் அறிக்கை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்று ஒருபுறம் சட்டப் போராட்டம் இருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து இவர் ஒரு சிறப்பான களப்பணியைச் செய்துள்ளார். இந்தப் பணி இவரின் உழைப்பிற்கு ஒரு மணிமகுடமாகவும், தாமிரபரணி ஆற்றுக்கு அவர் ஆற்றிய சிறப்புப் பணிக்குச் சான்றாகவும் விளங்குகிறது.
முத்தாலங்குறிச்சி காமராசுவின் தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் முள்செடி அகற்றும் பணிதான் அந்தச் சிறப்புப் பணியாகும். இந்தப் பணி தற்போது ஏரல் வட்டாரப் பகுதிகளிலும் தடையின்றித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தாமிரபரணியின் பசுமையையும், இயற்கை வளத்தையும் மீட்டெடுக்கும் இந்தப் பயணம், வருங்காலத் தலைமுறைக்கும் பயனளிக்கும் ஒரு நிலையான சுற்றுச்சூழல் இயக்கமாகத் தொடரும் என்ற நம்பிக்கையுடன் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நதிகளே நாகரிகத்தின் தொட்டில். ஆனால், காலப்போக்கில் மனிதத் தலையீடுகளாலும் பராமரிப்பு இல்லாமையாலும், நம் வாழ்வாதாரமான தாமிரபரணி நதி முட்செடிகளாலும் சீமைக் கருவேல மரங்களாலும் சூழப்பட்டுத் தனது பொலிவை இழந்திருந்தது. இதனை மீட்டெடுக்கும் நோக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரம்மாண்டமான நதி சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ‘எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்’ அமைப்பு, ‘கோமாட்சு’ நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிதியின் கீழ் வழங்கப்பட்ட வாடகையில்லா இயந்திரங்களைக் கொண்டு இப்பணியைச் செயல்படுத்தி வருகிறது. இந்த மகத்தான திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார் முத்தாலங்குறிச்சி காமராசு.

2023 டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சூறையாடிய பெருவெள்ளம் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்பித்தது. ஆற்றில் மண்டிக்கிடந்த முட்செடிகளே வெள்ளநீர் ஊருக்குள் புகுவதற்கான முக்கியக் காரணமாக அமைந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2024 ஜூலை 6-ஆம் தேதி கனிமொழி எம்.பி. அவர்களால் நதி சுத்தப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
தொடக்கத்தில் டீசல் மற்றும் ஓட்டுநர் ஊதியத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், அப்போதைய நீர்வளத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும், தனியார் நிதிப் பங்களிப்புடனும் மருதூர் அணை, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி போன்ற பகுதிகளில் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னரும் நிதி நெருக்கடி நீடித்தது.
நிதி நெருக்கடியால் பணிகள் தொய்வடைந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களைச் சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தார் முத்தாலங்குறிச்சி காமராசு. சூழ்நிலையின் அவசியத்தை உணர்ந்த ஆட்சியர், மாவட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கிவிட்டார். மாவட்ட நிர்வாகம் டீசல் மற்றும் ஓட்டுநர் ஊதியப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. இதனால் பணி மீண்டும் தங்கு தடையின்றித் தொடங்கியது.
ஓட்டுநருக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அந்தந்தப் பகுதி ஊராட்சி நிர்வாகங்களும், பொதுமக்களும் இன்முகத்துடன் கவனித்துக் கொண்டனர். இதன் விளைவாக, முத்தாலங்குறிச்சி பகுதியில் பல ஆண்டுகளாகப் புதர்மண்டிக் கிடந்த தாமிரபரணி மீண்டும் தனது பழைய எழிலுடன் காட்சியளிக்கத் தொடங்கியது. அரசு பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டிய இடத்தில், வெறும் ஆயிரங்களில் செலவு செய்து இந்தப் பணிகளை மிகச்சிறப்பாகச் செய்து முடித்தார் முத்தாலங்குறிச்சி காமராசு.
ஆறாம்பண்ணையில் பஞ்சாயத்துத் தலைவர் ஷேக் அப்துல் காதர் உதவியுடன் முட்செடிகள் அகற்றப்பட்டு 1,000 பனை விதைகள் நடப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் பகுதி கோயில்களின் நகரம்; அழகான அணைக்கட்டு இருக்கும் இடம். இந்த இடத்தின் கரைகள் எல்லாம் முள்செடிகள் அடர்ந்து, மக்களின் கழிப்பிடமாக மாறியிருந்தது. கோயிலைச் சுற்றி நடந்து கூடப் போக முடியாத நிலை இருந்தது. இந்த இடத்தில் வியாபாரிகள் சங்கம் மற்றும் ‘கிராம உதயம்’ மகளிர் குழுவினரின் உதவியுடன் ஆற்றங்கரைகள் சீரமைக்கப்பட்டன. தற்போது இவ்விடம் மிகவும் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.
ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை 12 கிலோமீட்டர் தொலைவை ‘மாதிரி தாமிரபரணியாக’ மாற்ற முத்தாலங்குறிச்சி காமராசு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு வரைவுத் திட்டத்தை அளித்தார். ஆட்சியர் அதற்கு அனுமதி வழங்கியதால் பணி வேகமாக நடந்தது; இங்குள்ள மொத்த முள்செடிகளும் அகற்றப்பட்டன. கிட்டத்தட்ட ஆற்றங்கரையிலிருந்து 1 கிலோமீட்டர் வரை இயந்திரம் சென்று, ஆற்றின் நடுவில் 25 வருட காலமாக வளர்ந்து கிடந்த முள்செடிகள் அகற்றப்பட்டன. இதனால், இந்தப் பகுதியில் ஊருக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஆற்று வெள்ளம், 2025-இல் வந்தபோது எந்தப் பாதிப்பும் இல்லாமல் சீராகக் கடலுக்குப் போய்ச் சேர்ந்தது.

ஆதிச்சநல்லூர் உலக நாகரிகத்தின் தொட்டில். இவ்விடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டவர் முத்தாலங்குறிச்சி காமராசு. இதனால் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு சார்பில் இந்தியாவில் முதல் ‘சைட் மியூசியமும்’ (Site Museum), மாநில அரசு சார்பில் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ‘பொருநை அருங்காட்சியகமும்’ அமைந்தன. இதற்கிடையில் 2023-இல் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் பாதிப்படைந்தது. இதற்கு காரணம் வரலாற்றுச் சிறப்புமிக்க அகழாய்வுப் பகுதிக்கு அருகிலுள்ள வடிகால் ஆகும். எனவே, இந்த வாய்க்கால் சுத்தப்படுத்தப்பட்டு, கரைகளில் இருந்த முள்செடிகள் அகற்றப்பட்டன. இதனால் வெள்ள நீர் வடிகாலில் எளிதாக வடிந்து செல்ல வகை செய்யப்பட்டது.
கருங்குளம் ஓர் அழகிய கோயில் நகரம். இந்த ஊருக்குள் செல்லும் இடத்தில் சம்பன்குளம் உள்ளது. இந்த குளம் அமலைச்செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, சிறிது வெள்ளம் வந்தால் கூடத் தண்ணீர் சாலைக்கு வந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இவ்விடம் பற்றி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களிடம் கூற, அவர் அந்தக் குளத்தினை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். சம்பன்குளம் தூர்வாரப்பட்டு, கரைகள் மேம்படுத்தப்பட்டன. தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தக் குளத்தினை அழகுபடுத்தி நடைபாதை அமைக்க, முத்தாலங்குறிச்சி காமராசு தற்போதைய ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஆழ்வார்திருநகரி வரை மாதிரி தாமிரபரணி நதி உருவாக்கப்பட்டதுடன், இரண்டரை லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டன. மேலும், ஒரு லட்சம் விதைப்பந்துகளைப் பள்ளி மாணவ-மாணவியர் ஆற்றங்கரைகளில் வீசிப் பசுமை இயக்கத்தில் பங்கேற்றனர். இப்பணிகளுக்கு மாவட்ட நிர்வாகம், எக்ஸ்னோரா நிறுவனம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் ஆகியவை துணை நின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியிலிருந்து ஏரல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையில் முட்செடிகளை அகற்றி, பனை விதைகள் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்கும் மாவட்ட நிர்வாகம், எக்ஸ்னோரா நிறுவனம் மற்றும் கிராம உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதையெல்லாம் ஒருங்கிணைத்துப் பணி தங்கு தடையின்றி நடைபெறவும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்து விரைவாகப் பணி நடைபெறவும், தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திலிருந்து அரசு அதிகாரிகளை அழைத்து வந்து பல விழாக்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
நதியைச் சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கரைகளைப் பலப்படுத்தவும் பசுமையை உருவாக்கவும் நான்கு கட்டங்களாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன:
முதற்கட்டமாக: ஆழ்வார்திருநகரியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் ஒரு லட்சம் பனை விதைகளும், 1,000 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
இரண்டாம் கட்டமாக: ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் ஒரு லட்சம் விதைப்பந்துகளை மாணவர்கள் ஆற்றங்கரைகளில் வீசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மூன்றாம் கட்டமாக: ஸ்ரீவைகுண்டத்தில் தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு தலைமையில் கரைகளைப் பலப்படுத்தும் நோக்கில் பனை விதைகள் நடப்பட்டன.
நான்காம் கட்டமாக: உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பொன்னன்குறிச்சி பகுதியில் அடர்ந்த முட்செடிகள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டது.
தான் பெற்ற விருதுகளைப் பற்றி முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, “இந்த விருதுகள் தனிநபர் ஒருவருக்குக் கிடைத்ததல்ல; மாறாக, தாமிரபரணிக்காக உழைத்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். என்னோடு உழைத்த சுமார் ஆயிரக்கணக்கான உள்ளங்களால்தான் இந்த வெற்றி எனக்குக் கிடைத்துள்ளது” என்கிறார்.
தொகுப்பு:
சக்தி ஆர்.முருகன்,
தலைமைச் செய்தியாளர்
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாகீர் மூலம் ஆதிச்சநல்லூர் கரையில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.
பணிகள் செய்வதில் உள்ளூர் மக்களுக்குப் பங்கு இருக்க வேண்டும் என்பதில் முத்தாலங்குறிச்சி காமராசு கவனமாக இருந்தார். எனவே, இந்தப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் மூலம் மரம் நட்டுப் பராமரிக்கும் பணி, விதைப்பந்துகள் மற்றும் பனை விதைகள் விதைக்கும் பணி ஆகியவை காமராசுவின் ஒருங்கிணைப்பில் நடந்தன. பனை விதைகளும் விதைப்பந்துகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமைப் போர்வையாக மாறி வருகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள முத்தாலங்குறிச்சி கிராமத்தில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் 50 ஆயிரம் பனை விதைகள் நடும் புதிய திட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியமும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் உடையார்குளம் குளத்தை எக்ஸ்னோரா நிறுவனம் மற்றும் ‘பாஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தூர்வாருதல் மற்றும் மரம் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணியைத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மரு. சுகுமார் தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா நிறுவனத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.
19.06.2026 அன்று திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி தான்தோன்றிக்குளம் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிக்காக ஹெல்ப் கிட்ஸ் நிறுவனம், ஷீட் டிரஸ்ட், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன், கோமாட்சு நிறுவனம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்பட்டன. இந்த ஏற்பாடுகளில் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான முத்தாலங்குறிச்சி காமராசு முக்கியப் பங்கு வகித்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வைப்பாற்றில், சாத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பில் ‘விருதுநகர் செழுமை கருவூலம்’ திட்டத்தின் கீழ் முட்செடிகளை அகற்றி மரம் நடும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். இதில் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான முத்தாலங்குறிச்சி காமராசு முக்கியப் பங்கு வகித்தார். இந்தப் பணியில் இன்னர் வீல் கிளப் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பொதுப்பணித்துறை அனுமதி பெற்று மக்கள் பங்களிப்புடன் பணிகள் நடந்து வருகின்றன.

இதனால் இவருக்குத் தமிழக அரசு பல விருதுகளை வழங்கி வருகிறது:
சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆற்றிய இந்த அர்ப்பணிப்புமிக்க பணிகளுக்காக, தமிழ்நாடு அரசின் “சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருது” (2025-26) வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் க. இளம் பகவத் அவர்கள் ரூ.25,000 பொற்கிழி மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு இப்பணியைச் செய்தமைக்காக ‘பசுமை முதன்மையாளர் விருது 2025’ வழங்கப்பட்டது. இந்த விருதை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார். இதற்காக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

இதேபோல் மாவட்ட அலுவலர் பாராட்டுச் சான்றிதழ், மாவட்ட வன அலுவலர் பாராட்டுச் சான்றிதழ், உதவி ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக பாராட்டு கேடயம், பேரூராட்சித் தலைவர் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பாராட்டு கேடயங்களையும் பெற்றுள்ளார்.
சென்னையில் நடந்த எக்ஸ்னோரா ஆண்டு விழாவில், தாமிரபரணி பணிக்காக மேடையில் தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களால் பாராட்டுப் பெற்றார்.


