குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாதி ரீதியான டி-ஷர்ட்கள் அணிவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா ஜூலை 15 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டுப் பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பேணக் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாதி ரீதியான டி-ஷர்ட்கள் அணிவதற்கும், பிற சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் எழுப்ப, வாசகங்கள் மற்றும் பாடல்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழா பகுதிக்குக் கம்பு, கத்தி, வாள் உள்ளிட்ட எந்தவொரு ஆயுதங்களையும் கொண்டு வர அனுமதி இல்லை எனப் பாதுகாப்பு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களில் அதிவேகமாகவோ அல்லது ஆபத்தான முறையிலோ பயணித்துப் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினரின் அறிவுரைகளையும், போக்குவரத்து ஒழுங்குமுறைகளையும் முழுமையாகப் பின்பற்றிப் பாதுகாப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


