2023 டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சூறையாடிய பெருவெள்ளம் ஒரு பாடத்தைக் கற்பித்தது. ஆற்றில் மண்டி நின்ற முட்செடிகளே வெள்ள நீர் ஊருக்குள் புகுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி அவர்களின் ஏற்பாட்டில், 2024 ஜூலை 6 அன்று கனிமொழி எம்.பி அவர்களால் நதியில் முள்செடிகளை அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதற்காக எக்ஸ்னரோ நிறுவனத்தின் மூலம், ‘கொமஸ்டோ’ வாடகை இல்லா இயந்திரம் கொண்டு முள்செடிகள் அகற்றும் பணி துவங்கியது. இதன் ஒருங்கிணைப்பாளராக எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நியமிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் டீசல் மற்றும் ஓட்டுநர் ஊதியத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும், அப்போதைய நீர்வளத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும், தனியார் நிதிப் பங்களிப்புடனும் மருதூர் அணை, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி போன்ற பகுதிகளில் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நடந்தன.
நிதி நெருக்கடியால் பணிகள் தொய்வடைந்த நிலையில், இந்தப் பணியின் ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அவர்களைச் சந்தித்தார். நிலைமையை உணர்ந்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை முடுக்கிவிட்டார்.
ஓட்டுநருக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை அந்தந்தப் பகுதி பஞ்சாயத்து நிர்வாகங்களும், பொதுமக்களும் இன்முகத்துடன் கவனித்துக் கொண்டனர். இதன் விளைவாக, முத்தாலங்குறிச்சி பகுதியில் பல ஆண்டுகளாகப் புதர் மண்டித் தெரிந்த தாமிரபரணி, மீண்டும் தன் பழைய எழிலுடன் காட்சியளிக்கத் தொடங்கியது.
ஆறாம்பண்ணையில் முட்செடிகள் அகற்றப்பட்டு 1000 பனை விதைகள் நடப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கம் மற்றும் ‘கிராம உதயம்’ மகளிர்குழுவினர் உதவியுடன் கரைகள் சீரமைக்கப்பட்டன. ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை 12 கி.மீ தொலைவு ‘மாதிரி தாமிரபரணி’யாக மாற்றப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அகழ்வாராய்ச்சிப் பகுதிக்கு அருகிலுள்ள வடிகால் கரைகள் தூய்மைப்படுத்தப்பட்டன. 25 வருடங்களாகப் புதர் மண்டிக் கிடந்த கரைகள் மேம்படுத்தப்பட்டன. பொன்னன்குறிச்சி பகுதியில் உள்ளாட்சி அமைப்புடன் சேர்ந்து மரச்செடிகள் வைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன.
கருங்குளம் சம்பன்குளம் தூர்வாரப்பட்டு, போக்குவரத்து இடையூறுகள் நீக்கப்பட்டன. இதில் உள்ள அமலைச் செடிகள் நீக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இந்தக் குளத்துக் கரையில் நடைபாதை அமைத்துச் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு இந்தத் துணைக் குழுவினர் பரிந்துரை செய்துள்ளார்கள்.
இதனால் 2025 ஆம் ஆண்டு தாமிரபரணியில் வெள்ளம் வந்தபோது, எந்தப் பாதிப்பும் இன்றித் தண்ணீர் கடலுக்குச் சென்றது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் முள்செடிகள் பிடுங்கப்பட்டுவிட்டன.
இதற்கிடையில், இந்தப் பணி கேமலாபாத் அருகில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இரண்டு வருடங்கள் தொய்வின்றி வேலை செய்த வாடகை இல்லாத இயந்திரம் பழுதாகிவிட்டது. இதனைச் சீர் செய்ய வேண்டும் என்றால் 1 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. இதனால் பணி முடங்கியது.
இந்தச் சூழ்நிலையில் ஒருங்கிணைப்பாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீவைகுண்டம் சமூக சேவகர் சித்திரைவேல், ஓட்டுநர் துரை மற்றும் ஸ்ரீவைகுண்டம் வியாபாரிகள் சங்கத்தினர் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சரவணன், தனது முதல் மாத எம்.எல்.ஏ சம்பளத்தினை அப்படியே தாமிரபரணி பணிக்குக் கொடுத்தார். அதில் ரூபாய் 80 ஆயிரத்தினை இந்த இயந்திரத்தைப் பழுதுநீக்கி வேலை செய்ய ஓட்டுநர் துரையிடம் கொடுத்தார். அப்போது சமூக சேவகர் சித்திரைவேல் உடனிருந்தார். தற்போது இயந்திரம் பழுதுநீக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது. அடுத்த வாரம் மீண்டும் தாமிரபரணியில் பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது முதல் மாதச் சம்பளத்தைத் தாமிரபரணி பணிக்கு வழங்கிய எம்.எல்.ஏ சரவணனைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்


