சாத்தூர் வைப்பாற்றில் சங்கரநத்தம் முதல் நென்மேனி வரை முள்செடிகளை அகற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ கோரிக்கை
சாத்தூரில் வைப்பாற்றைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தலைமை தாங்கி, முள்செடிகளை அகற்றும் பணியைத் துவக்கி வைத்து மரங்களை நட்டார்.
சாத்தூர் இன்னர் வீல் கிளப் சார்பில், ‘விருதுநகர் செழுமை கருவூலம்’ திட்டத்தின் கீழ், வைப்பார் ஆற்றின் குறுக்கே உள்ள முட்புதர்களை அகற்றி, மரங்களை நட்டு பராமரிக்கும் நிகழ்ச்சியின் தொடக்க விழா இதுவாகும். இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமை வகித்தார். சாத்தூர் நகர்மன்றத் தலைவர் (சேர்மன்) குருசாமி முன்னிலை வகித்தார். சாத்தூர் எம்.எல்.ஏ கடற்கரைராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். பசுமை சாம்பியன் விருது பெற்ற எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்புரையாற்றினார். இன்னர் வீல் கிளப் தலைவர் சுபா திட்ட விளக்கவுரையாற்றினார். சாத்தூர் கோட்டாட்சியர் எஸ்.கே.கனகராஜ், கீழ வைப்பார் வடிநிலக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் மலர்விழி, சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் குருசாமி உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், சாத்தூர் வைப்பாற்றில் சங்கரநத்தம் முதல் நென்மேனி வரை உள்ள முள்செடிகளை அகற்ற வேண்டும் என எம்.எல்.ஏ கடற்கரைராஜ் கோரிக்கை வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா பேசும்போது, “விருதுநகர் செழுமைத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை நமது மாவட்டத்தில் செய்ய உள்ளோம். தற்போது வைப்பாற்றைக் காக்கும் விதமாகச் சாத்தூர் இன்னர் வீல் கிளப் எடுத்துள்ள இந்த நடவடிக்கையைப் பாராட்டுகிறேன். வைப்பாற்றில் முள்செடிகளை அகற்றி மரங்களை நட ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும், சாக்கடை கலக்காத நதியை உருவாக்க வேண்டிய உதவிகளைச் செய்வோம்” என்று அவர் கூறினார்.
சாத்தூரில் மிகவும் பழமையான ஜட்கா பாலத்தினை நினைவுச் சின்னமாக மாற்ற வேண்டும் என எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோரிக்கை விடுத்தார். அதற்கு உரிய ஆவண செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். தொடர்ந்து, இன்னர் வீல் கிளப் சார்பில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டிக்கான ஜெர்சியை மாவட்ட ஆட்சியர் வெளியிட, எம்.எல்.ஏ கடற்கரைராஜ் அதனைப் பெற்றுக்கொண்டார்.
அதன்பின், வைப்பாற்றில் முள்செடிகளை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார். இன்னர் வீல் கிளப் செயலாளர் ஜான்சி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நித்தியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜெயச்சந்திரன், விவசாயச் சங்கத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி உட்படப் பலர் கலந்துகொண்டனர்.


