நெல்லை மாவட்டத் தாமிரபரணி ஆற்றில், ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் ₹59 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்காமல், பழமையான மண்டபங்களைச் சீரமைக்காமல், ஆற்றின் ஓட்டப் பகுதிக்குள் கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டக்கூடாது எனப் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வற்றாத ஜீவநதி தாமிரபரணியின் முக்கியத்துவம்
தாமிரபரணி ஆறு தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலக்கும் வற்றாத ஒரு ஜீவநதியாகும். இந்த நதியின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்ட மக்களுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 40 லிட்டர் வீதம், பல கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, நெல்லை சிப்காட் (SIPCOT) வளாகம், தூத்துக்குடி தொழிற்சாலைகள் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையம் ஆகியவை தடையின்றிச் செயல்படவும் இந்தத் தண்ணீரே ஆதாரமாக விளங்குகிறது.

முற்காலத்தில் கார், முன் கார், பிசானம் என மூன்று காலச் சாகுபடிகளையும் தாமிரபரணி ஆற்றின் பாசனத்தைக் கொண்டு விவசாயிகள் வெற்றிகரமாகச் செய்து வந்தனர். ஆனால், தற்போது அரசு தாமிரபரணியைப் பேணுவதில் போதிய ஆர்வம் காட்டாத காரணத்தினால், ஒரு போகம் விளைவிப்பது கூடக் கடினமான சூழல் நிலவுகிறது.
இதற்கிடையில், வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழைக் காலங்களில் பொழியும் உபரி நீர் பெருமளவில் கடலில் கலந்து வீணாவதைத் தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக விவசாயிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியும், இதுவரை முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
நதியைச் சூழும் சாக்கடை மாசு
தாமிரபரணியின் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது அதில் கலக்கும் சாக்கடை கழிவுகளாகும். ஆற்றின் 8 அணைக்கட்டுகள் மற்றும் 11 கால்வாய்கள் வழியாக வி.கே.புரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, மேலச்செவல், பத்தமடை மற்றும் நெல்லை மாநகராட்சியின் மொத்த சாக்கடை நீரும் தாமிரபரணியில் கலந்து நதியை வன்மையாக மாசுபடுத்துகிறது.

அதிலும் குறிப்பாக, நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் பகுதிகளின் கழிவுகள் பாளையங்கால்வாய் வழியாகவும், திருநெல்வேலி நகரப் பகுதிச் சாக்கடை இரட்டைக் கால்வாய் வழியாகவும் ஆற்றில் கலக்கின்றன. பாதாளச் சாக்கடைக் கழிவுகளை ராமையன்பட்டியில் தேக்கி வைத்து, அதை மேலும் சாக்கடை ஆக்கி, கோடகன் கால்வாய் வழியாக மீண்டும் தாமிரபரணியிலேயே ஒட்டுமொத்தமாகக் கலந்து விடுகிறார்கள். நெல்லை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட வெறும் 7 கிலோமீட்டர் தொலைவிற்குள் மட்டும் சுமார் 25 இடங்களில் சாக்கடை நீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த எவ்விதத் திட்டவட்டமான நடவடிக்கையும் இல்லை.
நீதிமன்றத்தின் தலையீடும் கள ஆய்வும்
இந்த நிலையில், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக் கோரியும், ஆற்றங்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மண்டபங்களைப் பாதுகாக்கக் கோரியும், கடந்த 2018-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான முத்தாலங்குறிச்சி காமராசு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கினை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அவர்கள் கடந்த 11.03.2024 அன்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கினர்:
உள்ளாட்சித் துறையினர் தாமிரபரணியில் சாக்கடை நீர் கலக்காமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆற்றின் படித்துறைகளையும், கல் மண்டபங்களையும் இந்து சமய அறநிலையத்துறை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும்.
ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து, கடந்த 10.11.2024 அன்று நீதியரசர்கள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் தாமிரபரணி ஆற்றுக்கே நேரில் வந்து, சாக்கடை கலக்கும் இடங்கள் மற்றும் படித்துறைகளை ஆய்வு செய்தனர். அதன் பின்னரும் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
‘நீர் மனிதர்’ ராஜேந்திர சிங் வருகை
இதன் காரணமாக, 02.01.2025 அன்று நீதிபதிகள் மேலும் ஒரு அதிரடி ஆணையைப் பிறப்பித்தனர்:
“இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தும், நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்தும் ஆற்றில் கழிவுகள் கலப்பதைத் தடுக்க முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றை இதில் ஈடுபடுத்தியும் பலனில்லை. எனவே, ராஜஸ்தானில் வறண்டு போன ஓடைகளையும் ஆறுகளையும் மீட்டெடுத்து ‘மகசேசே’ விருது பெற்ற இந்தியாவின் நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் அவர்களை இந்தப்பணிக்கு நீதிமன்ற ஆணையராக (Court Commissioner) நியமிக்கிறோம். அவர் நேரில் சென்று களப்பணி மற்றும் ஆய்வு செய்து, திட்டங்களைச் செயல்படுத்தத் தேவையான திட்ட மதிப்பீட்டுப் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்.”
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் 04.01.2025 அன்று நேரடியாக நெல்லைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டார். முதற்கட்டமாக, திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து, கழிவுநீரால் பாதிக்கப்படும் குளங்கள், வாய்க்கால்கள் மற்றும் திருநெல்வேலி நகரத்திற்குள் தாமிரபரணி பாய்ந்து ஓடும் சிந்துபூந்துறைப் பகுதியில் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும் ஸ்ரீபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு செய்தார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு தினங்கள் தீவிர கள ஆய்வு மேற்கொண்ட அவர், தன் அறிக்கையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளார். அதன் பின்னர், தாமிரபரணியைப் பாதுகாப்பதற்கான உரிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுப் பணிகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த வழக்கு தற்போது மதுரை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மேலும், தமிழக அரசு தாமிரபரணி ஆற்றுக்கான முறையான வரைவுத் திட்டத்தை (Draft Plan) சமர்ப்பித்தால், மத்திய அரசு தன் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் மூலம் தாமிரபரணியைச் சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் முதல் புன்னகாயல் வரை விரைவில் சர்வே செய்யப்பட்டு, சாக்கடை கலக்காத நதியாக தாமிரபரணியை மாற்ற நீதிமன்றம் மூலம் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநகராட்சியின் அதிரடித் திட்டமும் மக்கள் கொந்தளிப்பும்
‘பொருநை புனரமைப்பு கூட்டியக்கம்’ சார்பாகத் தாமிரபரணி தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, ஆற்றுக்கான வரைவுத் திட்டத்தையும் டிஜிட்டல் வரைபடத்தையும் (Digital Map) தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், நெல்லை மாநகராட்சி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
ஜெர்மன் வங்கி நிதி உதவித் திட்டத்தின் கீழ், 7 கிலோமீட்டர் தொலைவிற்கு ₹59 கோடி மதிப்பில் ஆற்றை மேம்படுத்தப் போவதாக மாநகராட்சி அறிவித்தது. முதலில் மகிழ்ச்சியடைந்த மக்கள், திட்டத்தின் முழு விவரங்களைப் பார்த்தவுடன் கொதித்தெழுந்தனர். ஆற்றில் 25 இடங்களில் கலக்கும் சாக்கடையை நவீன முறையில் தடுத்து, கரைகளில் மரங்களை வளர்ப்பதற்குப் பதிலாக, ஆற்று ஓட்டத்திற்குள்ளேயே பூங்காக்கள் (Parks), உணவகங்கள் (Hotels) மற்றும் கான்கிரீட் கட்டிடங்களை அமைக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் சிதிலமடைந்துள்ள 25-க்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கல் மண்டபங்களைச் சீரமைக்க இதில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் கண்டனம்
இதுகுறித்து இந்த வழக்கைத் தொடர்ந்த தாமிரபரணி நதி ஆர்வலரான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது:
“நெல்லை மாநகராட்சி திடீரென ஒருநாள் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தியது. ஆனால், அதில் இந்த ₹59 கோடி திட்டம் குறித்த எந்த ஒரு தெளிவான தகவலையும் கூறாமல், மேலோட்டமாகக் கருத்துக்களை மட்டும் கேட்டனர். அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தத் திட்டத்திற்கு ஒப்பந்தப் புள்ளி (Tender) கோரப்போவதாக அறிவித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் மக்கள் காற்று வாங்குவதற்காகப் பூங்கா அமைக்கப் போவதாகக் கூறுகிறார்கள். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் மூலம் வேய்ந்தான்குளம், நயினார்குளம் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டப்பட்ட பூங்காக்களும் கட்டிடங்களும் தற்போது மக்கள் பயன்பாடின்றிப் பாழடைந்து கிடக்கின்றன.
ஆனால், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் மக்கள் ஆற்றுக்காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்பதற்காகச் சுமார் 25 கல் மண்டபங்களையும், 2 கிலோமீட்டர் தொலைவிற்குப் படித்துறைகளையும் கட்டியுள்ளனர். இன்று அங்கே விழுந்து கிடக்கும் கற்களை எடுத்து அந்தப் பழமையான மண்டபங்களைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை; சாக்கடையை நிறுத்தவும் வழியில்லை. நதியின் நீர் ஓட்டத்திற்குள் கான்கிரீட் சுவர்களை எழுப்பினால், அடுத்த பெருவெள்ளத்தில் அவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிடும். அதன் பிறகு ஆற்றுப் படுகை முழுவதும் இரும்புக் கம்பிகளும் கான்கிரீட் குப்பைகளுமாக மாறி, மக்கள் ஆற்றுக்குள் இறங்கவே முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும்.
பழைய படித்துறைகளையும், கல் மண்டபங்களையும் அவற்றின் தொன்மை மாறாமல் சீரமைக்க வேண்டும். இரு கரைகளையும் முறையாக அளவீடு செய்து (Survey) ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரைகளில் அலைகற்கள் (Riprap/Stone pitch) அமைத்துப் பலப்படுத்த வேண்டும். 25 இடங்களில் கலக்கும் சாக்கடை நீரையும் பெரிய குழாய்கள் (Pipeline) மூலம் சேகரித்து, ஓரிடத்திற்குக் கொண்டு சென்று சுத்திகரித்து, அதைச் சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகளுக்குப் பயன்படுத்த அனுப்ப வேண்டும். அப்படி அமைக்கப்பட்ட கரைக்கு மேலே அவர்கள் அழகுபடுத்தும் பணிகளைச் செய்யலாமே தவிர, ஓடும் ஆற்றுப் படுகைக்குள் எந்தக் காரணத்தைக் கொண்டும் புதிய கான்கிரீட் கட்டிடங்களைக் கட்டக்கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி, விரைவில் பொதிகை மலை முதல் புன்னகாயல் வரை தாமிரபரணி ஆறு முழுமையாகச் சர்வே செய்யப்பட்டுச் சீரமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வேளையில், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று அவசரகதியில் செயல்படும் நெல்லை மாநகராட்சி இந்தத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். வற்றாத ஜீவநதியைத் தங்கு தடையின்றி ஓடவிட வேண்டும்; திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே நெல்லை மக்களின் ஒருமித்த குரலாகும்.
???? தாமிரபரணி பாதுகாப்பு: ஓர் ஒப்பீடு
நெல்லை தாமிரபரணியைப் பழமை மாறாமல் எப்படி அழகுபடுத்தலாம் என்று நவீன ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தில் கேட்டால் கூட, அது சாக்கடையைக் குழாய்கள் மூலம் தனியாக எப்படிப் பிரித்து எடுத்துச் செல்ல வேண்டும், கரைகளை எவ்வாறு பலப்படுத்த வேண்டும், வரலாற்று மண்டபங்களை எப்படிப் புதுப்பிக்க வேண்டும் என்று மிக அருமையான, இயற்கை சார்ந்த திட்டத்தைத் தருகிறது.
ஆனால், எந்தப் புண்ணியவான் (பொறியாளர்) இந்த மாநகராட்சித் திட்டத்தைத் தயாரித்தாரோ தெரியவில்லை, அவரைப் பொதுமக்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். “இது ஜெர்மன் வங்கியின் திட்டம், அவர்கள் சொன்னபடிதான் கேட்க முடியும்” என்று மாநகராட்சி ஆணையர் கூறுகிறார். நாம் வாங்குவது கடன்; கடனை வாங்கிவிட்டு ‘தங்க ஊசி’ என்பதற்காக அதைத் நம் கண்ணிலேயே குத்திக்கொள்ள முடியுமா? என்று வேதனையில் தாமிரபரணி நதி ஆர்வலர்கள் தவித்து வருகிறார்கள்


