தூத்துக்குடியில், மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தின விழாவை முன்னிட்டு மீன்வளக் கல்லூரி வளாகத்தைப் 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் நிறுவன தின விழாவை முன்னிட்டுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான சிறப்புத் திறந்தவெளி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு மீன்வளக் கல்வி மற்றும் அத்துறையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவ்விழாவின் முக்கிய குறிக்கோளாகும். இதையொட்டி, தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டு இக்கல்லூரி வளாகத்தைப் பார்வையிட்டனர்.
இவ்விழாவைக் கல்லூரி முதல்வர் சண்முகம் முறைப்படி துவக்கி வைத்தார். கண்காட்சியில் பல்வேறு வகையான கடல் மற்றும் நன்னீர் மீன்கள், இறால்கள், சிங்கிறால்கள், விதவிதமான நண்டுகள், நன்னீர் அலங்கார மீன்கள் மற்றும் கண்ணைக் கவரும் வண்ணமீன் தொட்டிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. மேலும், நவீன ஒருங்கிணைந்த பண்ணை முறைகள் மற்றும் கடலுணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் பல்வேறு தொழில்நுட்ப முறைகளின் மாதிரிகளும் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தன.
வருகை தந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு மீன்வள அறிவியல் படிப்பு மற்றும் அத்துறை சார்ந்த உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான விளக்கங்கள் பேராசிரியர்களால் வழங்கப்பட்டன. இந்தியாவின் இரண்டாவது மீன்வளக் கல்லூரியான இக்கல்லூரி, இளங்கலை மீன்வள அறிவியல், முதுகலை மீன்வள அறிவியல் மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவன தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவிப் பேராசிரியரும் தலைவருமான (பொறுப்பு) அருளொளி, உதவிப் பேராசிரியர்கள் கோமதி, மணிகண்டன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சிறப்பாக மேற்பார்வை செய்து நடத்தியிருந்தனர்.


