தூத்துக்குடி விமான நிலையத்தில் ‘யாத்ரி சுவிதா திவஸை முன்னிட்டு பல்வேறு கலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் விமான நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தவும், சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கவும் ‘யாத்ரி சுவிதா திவஸ்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகத் தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 15) பல்வேறு விழிப்புணர்வு மற்றும் சமூக நல நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாடு, விமான நிலையங்களில் பயணிகளுக்கான அதிநவீன வசதிகள் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சாதனைகள் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் ஜே.ஆர்.அனூப் தலைமை தாங்கிய இந்நிகழ்ச்சியில், நேற்று விமான நிலையத்திற்கு வந்த அனைத்துப் பயணிகளுக்கும் பாரம்பரிய முறைப்படி திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விமான நிலைய வளாகப் பகுதியில் பயணிகள் ஆர்வமுடன் மரக்கன்றுகளை நட்டினர்.
விழாவையொட்டி, நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசார் பங்கேற்ற சிறப்பு ரத்ததான முகாம் மற்றும் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, விமானத்துறையில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. தூத்துக்குடி விமான நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் விமானப் பயணிகள், பங்குதாரர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் எனப் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்


