தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் உள்ள மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில், கடையைத் திறக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் போட்டி ஆர்ப்பாட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பும் நிலவி வருகிறது.
தமிழகத்தில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பொது இடங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இடையூறாக இருக்கும் 717 மதுபானக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவ்வுத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டன. இதில், தூத்துக்குடி மாநகரப் பகுதிக்கு உட்பட்ட 13 கடைகள் அடங்கும். குறிப்பாக, நகரின் பிரதான போக்குவரத்துச் சாலைகளில் அமைந்திருந்த மாட்டுத்தாவணி, இரண்டாவது ரயில்வே கேட் பகுதி, புதிய பேருந்து நிலையம் மற்றும் எட்டயபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்த கடைகள் மூடப்பட்டதால், அப்பகுதிகளில் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்குவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது.
இத்தகையச் சூழ்நிலையில், தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் குடியிருப்பு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்திருந்தனர். எனினும், அந்த மதுக்கடை தொடர்ந்து இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இன்று காலை இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்தகுமார் தலைமையில், சுமார் 90 பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, மதுபானக் கடையைத் திறக்க விடாமல் தடுப்பதற்காக திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், தங்களுக்கு அருகில் உள்ள இக்கடையைத் தொடர்ந்து திறக்க வலியுறுத்தியும், 100-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் திடீரென அங்குத் திரண்டனர். அவர்கள் கடையை உடனே திறக்க வேண்டும் என வலியுறுத்திப் போட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்பிற்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், சலசலப்பும் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன், வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கடையை மூடக்கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் நீண்ட நேரம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எனினும், கடையை மூடும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனப் பொதுமக்கள் உறுதியாக நின்றதால் போலீசாரின் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டது.
இதற்கிடையே, வழக்கமான நேரமான மதியம் 12 மணிக்குக் கடையைத் திறப்பதற்காக விற்பனையாளர்கள் அங்கு வந்து கடையின் பூட்டைத் திறக்க முயன்றனர். அப்போது, அங்குத் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் விற்பனையாளர்களைச் சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டதால் கடையைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருதரப்புப் போராட்டத்தால் செல்வநாயகபுரம் பகுதியில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


