சேரகுளம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேரகுளம் ஊராட்சியில் நிலவி வரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காகப் பெரிய நீரேற்றுத் தொட்டிகளுக்குள் ஆபத்தான முறையில் இறங்கித் தண்ணீர் பிடித்துச் செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் இயங்கி வரும் சேரகுளம் ஊராட்சியானது, இப்பகுதியிலேயே மிக அதிகப்படியான குக்கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பிரதான ஊராட்சியாகும். இந்த ஊராட்சியின் கீழ் சேரகுளம், வெற்றிகுளம், ஸ்ரீரியந்தூர், மகிழ்ச்சிபுரம், சின்னார்குளம், தீராத்திகுளம், சுப்பிரமணியபுரம், இலுப்பைகுளம் எனப் பத்துக்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்த அனைத்துக் கிராமங்களின் குடிநீர்த் தேவைக்காகக் கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் பிரத்தியேக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுத் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அங்கிருந்து கருங்குளம் நீரேற்று நிலையத்திற்குத் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, பின்னர் சேரகுளம் தலைமை நீரேற்று நிலையம் மூலம் அனைத்துக் குக்கிராமங்களுக்கும் கூட்டுக் குடிநீராக விநியோகிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகச் சேரகுளம் ஊராட்சிக்குட்பட்ட அனைத்துக் குக்கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலமாகத் தண்ணீர் வராததால் ஆத்திரமடைந்த சேரகுளம், இலுப்பைகுளம், ஸ்ரீரியந்தூர் பகுதி பொதுமக்கள், வேறு வழியின்றிச் சேரகுளம் பிரதான நீரேற்று நிலைய வளாகத்திற்குத் திரண்டு வருகின்றனர்.
அங்குள்ள நிலத்தடி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குள் ஏணி மற்றும் கயிறுகள் மூலம் ஆபத்தான முறையில் உள்ளே இறங்கித் தண்ணீர் பிடித்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிடச் சென்றால், அதிகாரிகள் எவ்வித பதிலும் அளிக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் 200 முதல் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், ஒட்டுமொத்தக் கிராமத்திற்கும் வெறும் 5 முதல் 7 பொதுக் குடிநீர் குழாய்கள் மட்டுமே உள்ளன. இதனால், எப்போதாவது வரும் குறைந்தளவு தண்ணீரைப் பிடிக்கப் பெண்கள் மத்தியில் தினசரி கடும் சண்டைகள் அரங்கேறி வருகின்றன.
இதற்கிடையே, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ‘ஜல் ஜீவன் விநியோகத் திட்டத்தின்’கீழ், இந்தச் சேரகுளம் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக ப் பைப்லைன்கள் பதிக்கப்பட்டன. இதற்காகத் தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை விதிகளுக்குப் புறம்பாக, அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை தனியாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பணம் வசூலித்துக் குழாய்கள் பதிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அந்த உள்கட்டமைப்பில் வரவில்லை. தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால் வீதிகளில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மற்றும் வால்வுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாகப் புதைந்தும், திருடப்பட்டும் ஒட்டுமொத்தத் திட்டமுமே முழுமையாக முடங்கியுள்ளது” என்று கிராம மக்கள் தங்களது பெரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்துத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷு மகாஜன் உடனடியாகத் தலையிட்டு, தங்களது கிராமங்களுக்குத் தடையற்ற குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று சேரகுளம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


