கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் ரோட்டரி சங்கம் சார்பில் வாசகருக்கு புத்தகக் காதலன் விருது வழங்கப்பட்டது.
செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள விஸ்வா மீட்டிங் ஹாலில் மே15 முதல் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் ரூபாய் பத்தாயிரத்திற்க்கு மேல் புத்தகங்களை வாங்கி மாணவர்கள் மற்றும் நூலகங்களுக்கு வழங்கி வரும் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ராதாகிருஷ்ணனுக்கு புத்தக காதலன் விருது வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற ஓவியப்போட்டி கட்டுரை போட்டி திருக்குறள் எழுதும் போட்டிகளில் வென்றவர்களுக்கு பதக்கம் மற்றும் புத்தகமும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்ற வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளி 12ஆம் வகுப்பு மாணவர் பாஸ்கர்,காந்திநகர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி யாழினி ஆகியோருக்கு ரூபாய் 500 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி புத்தக திருவிழாவில் நடந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் முத்துச்செல்வம்,கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் எம்எஸ்.எஸ்.வி பாபு கலந்து கொண்டு வாசகருக்கு புத்தக காதலன் விருது வழங்கி பாராட்டி பேசினார். இதில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பிரபாகரன்,நடராஜன்,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் பொருளாளர் சங்கர்,தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ராஜபாண்டி, ரமேஷ், காளி, உள்பட மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்


