தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில், வைகாசி திருவிழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு நவதிருப்பதி பெருமாள்களுக்கு நம்மாழ்வார் உத்தியோகப்பூர்வமாக மங்களாசாசனம் செய்யும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி தலங்களில் 9-ஆவது தலமாகவும், வைணவ நெறியைப் பரப்பிய நம்மாழ்வார் அவதாரம் செய்த உன்னதத் தலமாகவும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் நம்மாழ்வாரின் வைகாசி விசாக அவதாரத் திருவிழா கடந்த மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், தீபாராதனை மற்றும் நித்தியல் கோஷ்டி வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று காலை 11 மணி அளவில், நவதிருப்பதி இதர தலங்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் நத்தம் எம்இடர்கடிவான் திருப்புளியங்குடி காய்ச்சினவேந்தன் இரட்டை திருப்பதி அரவிந்தலோசனன் தேவர்பிரான் பெருங்குளம் மாயக்கூத்தர் தென்திருப்பேரை நிகரில் முகில்வண்ணன் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் ஆகிய கோவில்களின் உற்ஸவ மூர்த்திகள் அனைவரும் பல்லக்குகளில் புறப்பட்டு, ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலுக்கு எழுந்தருளினர்.
ஆழ்வார்திருநகரி கோவில் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பூப்பந்தலில் 9 நவதிருப்பதி பெருமாள்களும் ஒரே வரிசையில் எழுந்தருளி நாடிவந்த பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். அதனைத் தொடர்ந்து, பெருமாள்கள் ஒவ்வொருவருக்கும் நம்மாழ்வார் உத்தியோகப்பூர்வமாக மங்களாசாசனம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, நம்மாழ்வாரை மதுரகவி ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் வைபவமும் நடைபெற்றது.இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மே 29-இல் தேரோட்டம்:
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் வரும் மே 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவிழா நாட்களின் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகளை மாவட்ட நிர்வாகமும், ஏரல் வட்டார அதிகாரிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.


