தூத்துக்குடி மாவட்டத்தின் 36-ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் மதன், சென்னைக்கு மாற்றப்பட்டு முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராகத் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்ட அபிஷேக் குப்தா இன்று காலை தூத்துக்குடி மாவட்ட காவல் தலைமையகத்திற்கு வருகை தந்தார். முன்னதாக, அவருக்குக் காவல் துறை ஆயுதப்படை சார்பில் கம்பீரமான அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த அணிவகுப்பு மரியாதையை முறைப்படி ஏற்றுக்கொண்ட அவர், அதன் பின்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது எஸ்பி பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அபிஷேக் குப்தாவிற்குத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர்கள் நேரில் சந்தித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.


