தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி ஆர். காசிலிங்கம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பாஜ கட்சி உறுப்பினர் ஆர். காசிலிங்கம் அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: “தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் மற்றும் மயான உள்கட்டமைப்புப் பகுதிக்கு அருகே டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
இந்த மதுபானக் கடையால் அந்தப் பகுதியை அன்றாடம் கடந்து செல்லும் பெண்கள், பள்ளிச் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மிகக் கடுமையான மன உளைச்சலுக்கும், பாதுகாப்பற்ற சூழலுக்கும் ஆளாகித் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதே டாஸ்மாக் கடையை இப்பகுதியிலிருந்து உடனடியாக அகற்றக் கோரி, இதுவரை 5 முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி மனுக்கள் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பொதுமக்களைத் திரட்டி இப்பகுதியில் 2 முறை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு, அரசின் கவனத்திற்குப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும், டாஸ்மாக் நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்குத் தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து, கடையைத் தொடர்ந்து நடத்தி வருவதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையின் காரணமாக இப்பகுதியில் தொடர்ச்சியாகப் பல வழிப்பறிச் சம்பவங்களும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கொடூரக் கொலைகளும், சமூக விரோதச் செயல்களும் அரங்கேறியுள்ளன.


