தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (மே 21), விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷூ மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு மே 1-ஆம் தேதி முதல் இதுநாள் வரை 30.37 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான மழையளவை விட 4.27 மி.மீ கூடுதலாகும். பாபநாசம் அணை 44.45 அடியாகவும் (நீர்வரத்து 315.625 கன அடி, வெளியேற்றம் 100 கன அடி), மணிமுத்தாறு அணை 72.84 அடியாகவும், சேர்வலாறு அணை 57.45 அடியாகவும் நீர் இருப்பு கொண்டுள்ளன.
மாவட்டத்தில் இன்னும் ‘Farmer Registry’ பணிகளை மேற்கொள்ளாத 6,331 பி.எம்.கிசான் பயனாளிகள் உடனடியாக இ-சேவை மையம் அல்லது வேளாண் துறை மூலம் இப்பதிவை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் பி.எம்.கிசான் நிதி உதவியும், அரசின் மானிய உரங்கள் உள்ளிட்ட இதர மானியத் திட்டங்களும் நிறுத்தப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
மாவட்டத்தில் eKYC மற்றும் ஆதார் இணைப்பு விடுபட்ட விவசாயிகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மே 15 முதல் ஜூன் 15 வரை அனைத்து வட்டாரங்களிலும் கிராமவாரியாகப் ‘பி.எம்.கிசான் சிறப்பு முகாம்கள்’ நடைபெற்று வருகின்றன.
பயிர் காப்பீட்டுத் தொகை விடுவிப்பு: கடந்த 2024-2025-ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பல்வேறு பயிர்களுக்காக மொத்தம் ரூ.37.22 கோடி இழப்பீட்டுத் தொகை சேமா காப்பீடு நிறுவனத்தால் தற்பொழுது வரை விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2025-2026-ஆம் ஆண்டிற்கான இழப்பீட்டுத் தொகை கணக்கீடு செய்யப்பட்டு விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இலவச பண்ணைக்குட்டைகள்: மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பாக, சமூக பங்களிப்பு நிதி (CSR Fund) உதவியுடன் மானாவாரி வட்டாரங்களில் விவசாயிகளின் நிலங்களில் 1,000 இலவச பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை) 54 விவசாயிகளுக்கு ரூ.86 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேஷ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் தங்கராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உட்படப் பல அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்களும், விவசாயப் பெருமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.


