தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் அரசியல் இழுபறிக்கு இடையே, தவெக தலைவர் விஜயை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவில்பட்டியில் முதியவர் ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (84) என்ற முதியவர் இன்று திடீரெனச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தைத் தலைமை தாங்கும் விஜயை, ஆளுநர் உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருந்தது.
போராட்டத்தின் போது அவர் உரக்கக் கத்தியபடி, “விஜயை ஆட்சி அமைக்க அனுமதியுங்கள், இல்லையென்றால் என்னைக் கைது செய்யுங்கள்” என போலீசாரிடம் முரண்டு பிடித்தார். வயதான காலத்தில் அவர் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வியப்புடன் பார்த்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட முதியவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கலைந்து செல்ல மறுத்ததால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, போலீசார் அவரைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
தமிழக அரசியலில் நிலவும் ‘மெஜாரிட்டி’ விவகாரம், சாதாரண மக்களிடையே, குறிப்பாக முதியவர்களிடையே கூட எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.


