தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (ஏப்ரல் 6) நிறைவடைந்தது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 188 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தொகுதி வாரியான வேட்புமனு விபரங்கள்:
நேற்று (06.04.2026) ஒரே நாளில் மட்டும் 94 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையும் சேர்த்து, இதுவரை பெறப்பட்ட மொத்த மனுக்களின் விபரங்கள் பின்வருமாறு:
விளாத்திகுளம்: 28 மனுக்கள்
தூத்துக்குடி: 33 மனுக்கள்
திருச்செந்தூர்: 35 மனுக்கள்
ஸ்ரீவைகுண்டம்: 28 மனுக்கள்
ஒட்டப்பிடாரம் (தனி): 28 மனுக்கள்
கோவில்பட்டி: 36 மனுக்கள் (மாவட்டத்தில் அதிகபட்சம்)
நேற்று தாக்கல் செய்யப்பட்ட 94 மனுக்களில் 77 ஆண்கள் மற்றும் 17 பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று வேட்புமனுக்கள் கூர்ந்தாய்வு: கடந்த மார்ச் 30-ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, பெறப்பட்ட அனைத்து 188 வேட்புமனுக்களும் இன்று (07.04.2026) காலை 11 மணியளவில் அந்தந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கூர்ந்தாய்வு (Scrutiny) செய்யப்படவுள்ளன.
இந்தக் கூர்ந்தாய்வு நிகழ்வு, வேட்பாளர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறும். இதில் தகுதியுள்ள வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, குறைபாடுகள் உள்ள மனுக்கள் நிராகரிக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் அமைதியாகவும், நல்ல முறையிலும் நடைபெறுவதற்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.


