தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலருக்கு வரவேற்பு
எப்போதுமே தோரணமலைக்கு என் பெயரைச் சொல்லி யார் சென்றாலும், அவர்களுக்கு மாலை மரியாதை செய்து, பிரசாதம் வழங்கி, இன்முகத்துடன் வழியனுப்பி வைப்பவர் அக்கோயிலின் பரம்பரை அறங்காவலர் திரு. செண்பகராமன் அய்யா அவர்கள்.
அய்யா அவர்கள் இன்று என்னுடன் பயணம் செய்தார். காலையில் அவரை நான் வரவேற்று, கிருஷ்ணாபுரம் பாலன் உணவகத்தில் சிற்றுண்டி அருந்தினோம். அப்போது மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஆயிரம் அய்யா அவர்களைச் சந்தித்தோம். அவருக்குத் தோரணமலை பிரசாதம் வழங்கப்பட்டது.
அதன்பின் கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோயிலைத் தரிசனம் செய்யப் புறப்பட்டோம். எங்களை வழிகாட்டி (Guide) கணேசன் வரவேற்றார். “தற்போது நீங்கள் தயாரித்து வழங்கும் ரீல்ஸ்களைப் (Reels) பார்த்துவிட்டுப் பலர் கிருஷ்ணாபுரம் கோயிலுக்கு வருகிறார்கள்” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார். பின்னர் அர்ச்சகர் எங்களை அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்து வைத்தார்.
தோரணமலை முருகன் கோயில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் அய்யா அவர்களுக்கு அர்ச்சகர் மாலை மரியாதை செய்தார். மற்றவர்கள் தன் கோயிலுக்கு வரும்போது அவர்களுக்குச் செண்பகராமன் அய்யா மரியாதை செய்வதையே நான் இதுவரை பார்த்திருக்கிறேன். ஆனால், இன்று கிருஷ்ணாபுரம் கோயிலில் அவருக்கு மாலை மரியாதை செய்து வரவேற்றது எனக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது.
தொடர்ந்து அங்கிருந்த சிற்பங்களையும் கட்டடக்கலைகளையும் பார்த்து ரசித்தோம். அதன்பின் அவரை முத்தாலங்குறிச்சிக்கு அழைத்துச் சென்றேன். நான் அறங்காவலராக இருக்கும் பழமையான சிவன் கோயிலை அவருக்குக் காட்டினேன். அக்கோயிலின் வளர்ச்சி குறித்துச் சில ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
அதன்பின் வரும் 23-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஸ்ரீ குணவதி அம்மன் கோயிலையும், அங்கு ஓடி வரும் தாமிரபரணி ஆற்றையும் கண்டு ரசித்தார். தொடர்ந்து எனது குலதெய்வமான பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளைப் பார்வையிட்டார். இறுதியில் எனது ஊரில் நான் பராமரித்து வரும் தோட்டத்தைப் பார்த்துவிட்டு, அதன் முன்னேற்றத்திற்காகச் சில ஆலோசனைகளைக் கூறினார்.
அவருடன் பயணம் செய்த இந்தத் தருணம் ஒரு பொன்னான தருணமாக அமைந்தது. அதன்பின் அவரை வழியனுப்பி வைத்துவிட்டு நான் எனது ஊருக்குப் புறப்பட்டேன்.


