தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை நாட்டைச் சேர்ந்த விசைப்படகு இன்று காலை திடீரெனத் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு, இலங்கையிலிருந்து அத்துமீறி நுழைந்த ஒரு விசைப்படகைக் கடத்தல்காரர்களுடன் சேர்த்து தருவைகுளம் கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்தப் படகு தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், அந்த விசைப்படகு தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணி அளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தப் படகில் திடீரெனத் தீப்பிடித்தது. கடல் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவெனப் படகு முழுவதும் பரவியது. இது குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் கோமதி அமுதா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சுமார் அரை மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் விசைப்படகின் 80 சதவீதப் பகுதி எரிந்து சேதமானது. எரிந்து போன இந்தப் படகின் மதிப்பு சுமார் 7 லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து தெர்மல் நகர் மற்றும் தருவைகுளம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், படகின் அருகே யாரோ குப்பைகளைக் கொட்டி தீ வைத்துள்ளனர் என்றும், அந்தத் தீ காற்றின் வேகத்தால் படகிற்குப் பரவியதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாகத் தருவைகுளம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீ வைத்த நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


