தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 246 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க நுண் பார்வையாளர்களை கணினி மூலம் தற்செயல் முறையில் தேர்வு செய்யும் (Randomization) முதற்கட்டப் பணி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான க.இளம்பகவத், இ.ஆ.ப. தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் எலுச்சூரி ரத்னாகர ராவ், சோடிங்புயீ, அரவிந்த் குமார் வெர்மா, காவல் பார்வையாளர் ஹியர்மத் சுதிர் கல்யா மற்றும் செலவினப் பார்வையாளர் நகுல் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 246 பதற்றமான வாக்குச்சாவடிகள், கவனிக்கத்தக்க (Vulnerable) வாக்குச்சாவடிகள் 243, கூர்நோக்கக் கூடிய (Critical) வாக்குச்சாவடிகள் 3 என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் மொத்தம் 203 அமைவிடங்களில் அமைந்துள்ளன.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, இந்த இடங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மத்திய அரசுப் பணியாளர் நுண் பார்வையாளராக நியமிக்கப்படுவார். மேலும், இணையவழி நேரடி ஒளிபரப்பு (Webcasting) மற்றும் மத்தியப் படைப் பாதுகாப்பு ஆகியவையும் அங்கு உறுதி செய்யப்படும். இன்றைய முதற்கட்டத் தேர்வின் மூலம் மொத்தம் 244 நுண் பார்வையாளர்கள் (காப்புப் பணியாளர்களையும் சேர்த்து) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்


