பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்தன. தூத்துக்குடி மாவட்ட மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நேற்றுடன் (மார்ச் 26) நிறைவடைந்தன. தேர்வுகள் முடிந்து மையங்களில் இருந்து வெளியே வந்த தூத்துக்குடி மாவட்ட மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இம்முறை 8,547 மாணவர்கள், 10,724 மாணவிகள் என மொத்தம் 19,271 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 93 தேர்வு மையங்களில், பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.
கடைசித் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள், பள்ளி வளாகங்களுக்கு முன் திரண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்ட கால நண்பர்கள் பிரியும் தருணம் என்பதால், பல மாணவர்கள் ஒருவருக்கொருவர் சீருடைகளிலும் நோட்டுப் புத்தகங்களிலும் ‘ஆட்டோகிராப்’ (கையெழுத்து) வாங்கி நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை பெற்றனர்.
தேர்வுகள் இனிதே முடிவடைந்ததைத் தொடர்ந்து, மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அடுத்தகட்டமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


