கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்தை யொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தது.
அங்குள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு காலை 7.20 மணியளவில் கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஜ்வரன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7 மணியளவில் தேவர் சமுதாயம் சார்பில் மண்டகபடி திருவிழா நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டத்தை முன்னிட்டு பிப்.1-ந் தேதி காலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு காலசந்தி பூஜைகள் நடைபெறும். காலை 6.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். காலை 7.30 மணியளவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
காலை 9.30 மணியளவில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று தேர் நிலையை வந்தடைந்த உடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
மேலும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இரவு 7 மணியளவில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி திருவிழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்


