பாளையங்கோட்டையில் தசராபண்டிகையை போலவே பல்வேறு பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மக்கள் தசரா பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினாலும் அவர்களது நம்பிக்கைகள் பண்டைத் தமிழர் வழிபாட்டு முறைகளுடன் பின்னிப் பிணைந்ததாக உள்ளது. குறிப்பாக, குலதெய்வ வழிபாடு மற்றும் கிராமியத் தெய்வங்களுக்கு ஆண்டு தோறும் கொடை விழா நடத்துவது போன்ற சடங்கு களை விடாமல் கடைப்பிடித்து வருகின்றனர். யாராவது புதிய நபரைச் சந்திக்க நேரும்போது ‘உங்கள் குல தெய்வம் எது?’ என்று கேட்கும் வழக்கம் நெல்லைச் சீமையில் தற்போதும் உள்ளது.
கிராம தெய்வ வழிபாடுகளில் தங்கள் தெய்வங் களின் ஆற்றல் குறையாமல் இருப்பதற்கும், புதிய கோயில்களில் தெய்வங்களுக்கு அருள் ஏற்றுவதற்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. அம்மன் கோயில்களில் அம்மனின் ஆற்றல் குறையாமல் அவளது ஆட்சிப் பகுதிகளில் சக்தியை நிலைநாட்ட அம்மனைக் கோயிலுக்கு வெளியே வைத்து விழா எடுக்கும் பழக்கம் உள்ளது. இது ‘சூறையிடல்’ என்று அழைக்கப் படுகிறது. இவ்விழாவின்போது பெரிய கொப்பரைகளில் கஞ்சி வார்த்து மக்களுக்கு வழங்குவார்கள். அப்போது ஊர் முழுவதும் வேப்பிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். வீட்டு வாசலில் வேப்பிலைத்தோரணம் கட்டப்பட்டு, மஞ்சள் தண்ணீர் தெளித்து கோலமிடப் பட்டிருக்கும். அம்மன் கோயில் பூசாரிகள் மஞ்சள் ஆடை அணிந்து வேப்பிலை கட்டிக்கொண்டு கையில் திருநீற்றுக் கப்பரையுடன் குறி சொல்லுவார்கள்.
பெரும்பாலுமே ஆடி மாதம் இதை கூழ் ஊற்றுதல் என கொண் டாடுகிறார்கள்.
நேர்ச்சை உள்ளவர்களும், பக்தர்களும் புதிய சுளவில் பச்சரிசி மாவினை அம்மனுக்குப் படைத்து, பின்னர் அதனை கஞ்சியாகக் காய்ச்சுவார்கள். அம்மன் கோயிலில் காய்ச்சப்படும் கஞ்சியை ஊர் மக்கள் விரும்பி வாங்கிச் சாப்பிடுவார்கள். இந்த அம்மன் கஞ்சியைக் குடித் தால்தான் ‘நோய்களில் இருந்து தப்ப முடியும், தீய சக்திகள் தம்மை அணுகாது’ என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது. இதை ஒவ்வொரு கிராமத்திலும் கொண்டாடிக் கொண்டிருக் கிறார்கள்.
பாளையங்கோட்டையில் உள்ள அம்மன் கோயில்களில் இத்திருவிழா இன்றளவும் பய பக்தியுடன் கடைப்பிடிக்கப் படுகிறது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வந்து கஞ்சி வாங்கிச் செல்வர். மேலும், இவ்விழாவின் நிறைவாக ‘சூறையிடல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். ஆவிகள் மற்றும் முனி களைச் சமாதானம் செய்து விரட்டுவதற்காக முட்டை வீசப்படும். இந்த முட்டை களை ஆவிகளும், முனிகளும் மேலே இருந்தவாறு பெற்றுக் கொள்வதால் அந்த முட்டைகள் கீழே வருவ தில்லை என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. இந்த முட்டை களைப் பிடிக்க ஆவிகள், முனிகள் வரும் என்பதால் அதன் முன் எதிர்ப் பட்டுவிடக்கூடாது என்பதற்காக அச்சமயத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அதுமட்டுமல்ல நிறைமாதக் கர்ப்பிணிகள், குழந்தைகள் தப்பித் தவறிக்கூட வெளியேறக் கூடாது என்பதில் வீட்டுப் பெரியவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அத்தகைய வீடுகளில் தடியங்காய் அல்லது பூசனிக்காய் உடைக்கப்படும்.
பல கிராமங்களில் ஆவிகளுக்கு மது வகைகளும் படைக்கப்படுவது உண்டு. குறிப்பாக சுடலை மாட சுவாமிகோயில்கள் மற்றும் 21 கூட்டுறவு தெய்வங்களை வணங்கும் இடங்களில் மது பாட்டில் மற்றும் கள்ளு வைக்கும் வழக்கம் உள்ளது.
மக்களைக் காவு வாங்கும் காலரா, அம்மை போன்ற நோய்களில் இருந்து தடுக்கவே அம்மனுக்கு ஆற்றல் அதிகரிக்கும் விழாக்கள் எடுக்கப் படுகின்றன. இந் நாட்களில் மக்கள் வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரில் குளிப்பார்கள்.
இதை போலவே சித்திரை வருடப்பிறப்பு, தைப்பொங்கல், தீபாவளி, பவுர்ணமி பூஜை, மாதாந்திர விளக்கு பூஜை, வெள்ளிக் கிழமை பூஜை, இராகுகால பூஜை, வருசாபிசேகம் போன்றவை களும் கூட முன்னர் குறிப்பிட்ட நாட்டுப் புறக் கோயில்களில் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவையெல்லாவற்றையும் விட, கிராமத் தெய்வங்களுக்குப் பங்குனி உத்திரத்தின்போது மக்கள் எடுக்கும் கொடைகளே மிக, மிக விசேஷமானது. பொதுவாக சிறு தெய்வங்கள் பூடம் அமைத்தே வணங்குகிறார்கள்.
ஆதியில் அனைத்து வழிபாடுகளும் பூட வழிபாடு களாகவே இருந்திருக்க வேண்டும். இதையொட்டியே ‘பூடம் தெரியாமல் சாமியாடுகிறார்’ என்ற சொலவடை இன்றும் நெல்லைச் சீமையில் உலாவுகிறது. பிற்காலத்தில், அந்தந்த தெய்வங்கள் குறித்து வாய்மொழியாக வழங்கப்பட்டு வரும் கதைப் பாடல்கள் அடிப் படையில் அத் தெய்வங்களுக்கு உருவம் கொடுக்கும் வழக்கம் சில இடங்களில் தோன்றி யிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.
இவ்வாறு கொடை காணும் தெய்வங்களில் பேச்சியம்மனும், சுடலை மாடனும் முக்கிய மானவர்கள். இந்த இரு தெய்வங் களும் அனேகக் கோயில்களில் சேர்ந்தே உள்ளனர். சில இடங்களில் மட்டுமே தனித்த பேச்சி வழிபாடு உள்ளது. தனியே அமர்ந்த நிலையில் காணப்படும் பேச்சியம்மன் தன் மடியில் பிள்ளைப் பிணத்தைக் கிடத்தி உண்பது போலக் காணப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், வாயில் பிள்ளைப் பிணத்தைக் கவ்விய நிலையிலும், இடுப்பில் பிள்ளையை வைத்துள்ள நிலை, காலால் பிள்ளைப் பிணத்தை மிதித்த நிலை என்ற நான்கு நிலைகளில் பேச்சியம்மன் காணப் படுவதுண்டு.
இந்த தெய்வங்களுக்கு முன்னோரு காலத்தில் பூட வழிபாடே இருந்தது. ஆனால் சமீப காலத்தில் இதற்கு உருவம் செய்து வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் கோயில் கொடை விழாவில் உருவம் செய்து வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
இந்த தெய்வங்கள் பார்ப்பதற்கு பயம் ஏற்படுத்துவது போலவே இருக்கும். இது போன்ற காவல் தெய்வம். நம்மை நெறிபடுத்தும் , தவறு செய்தால் தண்டிக்க செய்யும்.
நெல்லை மாவட்டத்துக்கே உரிய தெய்வம் சுடலை ஆண்டவர். இவரைப்பற்றி நாம் தொடர்ந்து காணலாம்.
( நதி வற்றாமல் ஓடும்)


