நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் பிரசன்ன திருநாளை முன்னிட்டு தீபம் ஏற்றி சிறப்பு ஆராதனை நடந்தது.
உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து குழந்தையாக பாரில் பிறந்ததைக் கொண்டாடும் வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25ந் தேதி கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த செய்தியைக் கேள்விப்பட்டு கிழக்கு தேசத்தில் இருந்து 3 வானியல் அறிஞர்களான சாஸ்திரிகள் புதிதாக தோன்றிய நட்சத்திரத்தைப் பார்த்து, இயேசு குழந்தையாக புவியில் பிறந்த செய்தியை அறிந்து, அந்த நட்சத்திரம் வழிகாட்டிய திசையில் சென்ற சாஸ்திரிகள் மூவரும் பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் ஆகியவற்றைக் குழந்தை இயேசுவுக்கு காணிக்கையாக படைத்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபுளில் கூறப்பட்டுள்ளது.
இதை நினைவுகூரும் வகையில் ஜனவரி 6ந் தேதியை புற ஜாதிகளின் கிறிஸ்மஸ் அல்லது பிரசன்னத் திருநாள் என கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் பிரசன்ன திருநாள் ஆராதனை பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் பாடகர் குழுவினர் ஆலயத்தின் உட்புறம் சிறப்பு பாடல்களைப் பாடிக் கொண்டு பவனியாக வந்தனர்.
இதையொட்டி ஆலய வளாகத்தில் வாழைத் தண்டுகளின் மேலே நடுப்பகுதியில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டிருந்தது. இச் சிறப்பு ஆராதனையில் உதவி குருவானவர் தனசேகர் ராஜா, சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜெசு செல்வன் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர்.
நாசரேத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரசன்னத் சிறப்பு ஆராதனை நடந்தது. அகப்பைக்குளம் தூய அந்திரேயா ஆலயத்தில் +உலக்கைப் பண்டிகை+ என அழைக்கப்படும் பிரசன்னத் திருநாள் சிறப்பு ஆராதனை குருவானவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. பிரசன்ன திருநாளை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சபை மக்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த உலக்கையை தரையில் நட்டி வைத்து, நடுவில் நெல் குத்துவதற்கு எதுவாக உள்ள குழியில் அரை முறி தேங்காயில் எண்ணெய் ஊற்றி திரி அமைத்து தீபம் ஏற்றி வைத்திருந்தார்கள்.
இதனால் அகப்பைக்குளம் சபை மக்கள் இதனை “உலக்கை பண்டிகை” எனக் கொண்டாடி வருகிறார்கள். பின்னர் ஆராதனை நிறைவு பெற்றதும் இந்த விளக்குகளில் பயன்படுத்தப்படும் தேங்காய் ஏலம் விடப்பட்டது. அதனை அகப்பைக்குளம் சபை மக்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
மேலும் நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் சேகரத் தலைவா் நவராஜ் தலைமையிலும், மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் சேகரத் தலைவா் ஞானசிங் எட்வின் தலைமையிலும், திருமறையூா் மறுரூப ஆலயத்தில் குருவானவா் ஜான்சாமுவேல் தலைமையிலும், வாழையடி தூய திரித்துவ ஆலயத்தில் குருவானவா் வெல்ற்றன் ஜோசப் தலைமையிலும்,கடையனோடை சிஎஸ்ஐ ஆலயத்தில் குரு ஆசீா்சாமுவேல் தலைமையிலும் பிரசன்னத் திருநாள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.


