தூத்துக்குடியில், பாண்டியபதி தேர் மாறனின் 273 ஆவது பிறந்தநாள் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட கட்டபொம்மனுக்குக் கப்பலும், ஊமைத்துரை மருது சகோதரர்களின் புரட்சிப் படைக்குத் தம் கப்பல் மூலம் ஆயுதங்களும் கொடுத்து உதவியவர் தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியன். இவருடைய கல்லறை தூத்துக்குடி லசால் அருள்சகோதரர்களின் வளாகத்தில் உள்ளது.
அந்தக் கல்லறை வளாகத்தில் வைத்து தேர் மாறனின் 273 ஆவது பிறந்த நாள் விழா, நெய்தல் அண்டோ எழுதிய தூத்துக்குடி வரலாறு நூல் வெளியீடு, நலத்திட்ட உதவிகள் வழங்கல் என முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குப் பனிமய மாதா பேராலய அதிபர் ஸ்டார்வின் அடிகளார் ஆசியுரை வழங்கினார். கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் முன்னாள் தலைவர் பகவத்சிங் தலைமை தாங்கினார்.
வேம்பாறு – ஜோ வளன் பழையகாயல் – ஆரோக்கியம், புன்னைக்காயல் – இட்டோ, மணப்பாடு – கிளைட்டன் ஆகிய ஊர்த்தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தேர்மாறன் குடும்பத்தைச் சார்ந்த பெரோஸ் மோத்தா வீரவணக்கம் செலுத்தினார்.தமிழக வாழ்வுரிமை கட்சியின் தென் மண்டலப் பொறுப்பாளர் ஜெரோன் குமார் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நெய்தல் அண்டோ எழுதிய தூத்துக்குடி வரலாறு என்ற நூலை பேராசிரியை பாத்திமா பாபு வெளியிட, திரேஸ்புரம் பரவர் ஊர் கமிட்டி செயலர் ராஜ் பெற்றுக்கொண்டார் மணவை வினோஜின் நூலை அறிமுகம் செய்து பேசினார்.
நெய்தல் எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் கலாபன் வாஸ், அன்னை பரவர் நலச் சங்கத்தின் சேவியர் வாஸ், வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணைச் செயலாளர் வில்லியம் மஸ்கரனாஸ், ம.தி.மு.க. நக்கீரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மாவட்டச் செயலர் கிதர் பிஸ்மி, கூட்டுறவு பண்டகசாலையின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் எட்வின் பாண்டியன், பாரம்பரிய நாட்டுப் படகு சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்ரா ராஜா போஸ் ரீகன், அருட்தந்தை சாதே செல்வராஜ், அருட்ஜெயந்தன், தியாகி பெஞ்சமின் நற்பணி மன்றத்தின் அமலிநகர் பிரேசில், மாதா கோவில் பங்கைச் சார்ந்த நிம்மி, குரூஸ் பர்னாந்து மன்றத்தின் செயலர் சசிகுமார், வெனான்சிஸ், மெத்தோடியஸ் உள்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவில் உயர்கல்வி பயிலும் கடலோடிகளின் எட்டு இளையோர்க்குத் தலா ஐயாயிரம் வீதம் நெய்தல் எழுத்தாளர்கள் இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது. அமைச்சர் கீதா ஜீவனிடம், தேர் மாறனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க ஏற்பாடு செய்யும்படி கடலோர ஊர்க்கமிட்டி மற்றும் பரத குல ஆளுமைகள் இணைந்து மனு ஒன்றை வழங்கினர்.
முன்னதாகக் குரூஸ் பர்னாந்தீஸ் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹெர்மன் கில்டு வரவேற்றார். நெய்தல் எழுத்தாளர் வாசகர்கள் இயக்கத்தின் மணவை யோகேஷ் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியைத் தமிழ்ச்செம்மல் நெய்தல் அண்டோ தொகுத்து வழங்கினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து இருநூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட, குரூஸ் பர்னாந்தீஸ் நற்பணி மன்றத்தினரும், நெய்தல் எழுத்தாளர்கள் வாசகர் இயக்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.


