சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விசாரித்து முடிக்க மேலும் 3 மாதம் அவகாசம் அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக 2020-ம் ஆண்டில் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர்.
இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கூட்டுச்சதி நடந்ததா? என்பதற்கான சட்டப்பிரிவு 120 (பி) -ன்கீழ் வழக்குபதிவு செய்தது குறித்து கோர்ட்டு இறுதி முடிவு எடுப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் இரட்டைக்கொலை வழக்கு விசாரணையை முடிக்க இறுதியாக 6 மாத கால அவகாசம் வேண்டும் எனக்கேட்டு மதுரை மாவட்ட கோர்ட்டு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாட்சிகளிடம் மீண்டும் விசாரிக்கும்படி கோரிய மனு குறித்து கீழ் கோர்ட்டு உரிய முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை கீழ் கோர்ட்டில் விசாரித்து முடிப்பதற்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.


