குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியதால், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக நேற்று காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
குமரிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதை தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் கப்பல்கள் பாதுகாப்பான பாதையில் பயணம் செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதேபோன்று மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 265 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.


