தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென் குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி நகர் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிகநகர், இந்திரா நகர், முத்தையாபுரம் அருகேயுள்ள பொன்னாண்டி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை மழை நீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். மழை நீரை விரைந்து அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்துள்ளது. குழந்தைகள் வார்டு பகுதி, குழந்தைகள் வார்டு தீவிர சிகிச்சை பகுதி, இரத்த வங்கி மற்றும் பல்வேறு வார்டு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராட்சத பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதால் மக்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

கோரம்பள்ளம், குளக்கரை பகுதிகளில் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைத் தோட்டங்களில் வெள்ள நீா் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், விடுமுறை நாளில் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனா். எஸ்.ஐ.ஆா். முகாம்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.


