தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுக்க பெண்ணிடம் உதவுவது போல் நடித்து ரூ.5 ஆயிரம் பணம் வசூலித்த இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் குறைதீர்க்கும் கூட்டம் எஸ்பி ஆல்பர்ட்ஜான் தலைமையில் நடந்தது. அப்போது அங்கு குடும்ப பிரச்சினை தொடர்பாக புகார் கொடுப்பதற்காக ஒரு பெண் வந்தார். அந்த பெண்ணுடன் வேறொரு நபரும் உடன் வந்திருந்தார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து மனு கொடுத்தனர். ஆனால் அவர்களின் நடவடிக்கையில் எஸ்பி ஆல்பர்ட்ஜான் சந்தேகம் அடைந்தார். இதனால் பெண்ணுடன் வந்த நபரை வெளியே அனுப்பிவிட்டு, அந்த பெண்ணிடம் தனியாக பேசினார். அப்போது, அந்த பெண்ணுடன் வந்த நபர் கரூர் சின்னதாராபுரத்தை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மகன் வின்சென்ட் (49) என்பது தெரியவந்தது.
இந்த நபர், பெண்ணின் குடும்ப பிரச்சினை குறித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசி தீர்த்து வைப்பதாக கூறி இடைத்தரகர் போல செயல்பட்டு ரூ.5 ஆயிரம் வசூலித்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மனு கொடுப்பதற்காக வந்த பெண்ணிடம் ரூ.5 ஆயிரம் வாங்கியதாக வின்சென்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் மோசடி, திருட்டு உள்ளிட்ட 3 வழக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் மாவட்ட எஸ்பியை நேரடியாக சந்தித்து மனு அளிக்கலாம். இதுபோன்று தங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இடைத்தரர்களாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி ஆல்பர்ட்ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


